SPB பிறந்த நாள் அதுவுமா.. இளையராஜா சொன்ன அந்த விஷயம்.. ஆச்சரியப்படவைக்கிறாரே!
சென்னை: பாடும் நிலா என்று பலராலும் அன்போடு அழைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 4ஆம் தேதி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகிறார்கள். கொரோனா என்ற உயிர்க்கொல்லி பேரலையில் அவர் மறைந்தாலும் தென்னிந்தியாவில் பல குக்கிராமங்கள் வரை அவருக்காக அஞ்சலில் செலுத்தப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் பிரியத்தின் வெளிப்பாடு.
இந்நிலையில் அவரது பிறந்த நாளில் கமல்ஹாசன் மற்றும் இளையராஜா என இருவரும் புகழ் வணக்கம் செலுத்தி உள்ளனர். குறிப்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், " என் கரம் பற்றிய விரல், என் இசைக்கான குரல் அன்னையா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவர் வாழ்க, குரலாக" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் எஸ்.பி. பி குறித்து தான் பேசிய குரல் பதிவை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அதில் அவர், " ஒரு கம்போசரோட மனசுல என்ன ஓடுதுன்னு எஸ்பிபி (SPB) அளவுக்கு யாராலயும் அவ்ளோ சீக்கிரம் புரிஞ்சுக்க முடியாது. மைக் முன்னாடி நின்னுட்டாருன்னா, அந்தப் பாட்டுக்குள்ள அப்படியே ஜீவனைக் கொண்டு வந்து கொட்டிடுவாரு! அவரோட வாழ்க்கை, ஆழமான நட்புகள், அப்புறம் யாராலயும் தொட முடியாத அந்த 50,000 பாடல்களோட மகா சாதனை... இதையெல்லாம் கொண்டாடுற நாள் இன்னைக்கு. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் SPB! நீங்க எப்போதும் எங்க கூடவே தான் இருக்கீங்க" என்று எமோஷனலாக கேப்ஷனிட்டது மட்டும் இல்லாமல், குரல் பதிவையும் பகிர்ந்துள்ளார்.
இளையராஜா: அந்த குரல் பதிவில், " பாலு இல்லாமல் இருப்பது ஒரு வெற்றிடமாகவே எனது மனதில் உள்ளது. அவருக்கு நிகரான குரல் யாருக்கும் இல்லை, அவரைக் காப்பி அடிப்பவர்கள் அவரது குரலுக்கு அருகில் கூட செல்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது குரலை காப்பி அடிக்கவே முடியாது. அவரது அர்ப்பணிப்பையும் ஈடுபாட்டையும் எப்படி காப்பி அடிக்க முடியும்.

உணர்வு: அவரது திறமையும் பாடலை அவர் வெளிக்கொண்டுவரும் விதமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனது இசையில் ஆண்கள் மட்டும் பாடும் பல பாடல்களை அவர்தான் பாடி இருப்பார். அதற்கு காரணம் அவரது புகழ் அல்ல, அவரது திறமைதான். ஒரு பாடல் வழியாக என்ன உணர்வு வெளிப்பட வேண்டுமோ, அதை மிகவும் கவனமாக வெளிக்கொண்டு வருவார்.
எதிர்பார்ப்பு: ஒரு பாடலில் என்ன இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பேனோ, அதை நேர்த்தியாக நிவர்த்தி செய்து வைப்பவர் எஸ்.பி.பி. எனது நண்பர் என்பதைக் காட்டிலும் அவரது திறமை தான் என்னை ஈர்த்தது. 50 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார் என்றால் அது அவரது திறமையால் தானே. இதை யாராலும் நெருங்கக் கூட முடியாது. வார்த்தைகளாலும் கற்பனைகளாலும் அவரது புகழை விவரிக்க முடியாது. எத்தனை பாடகர்கள் வந்தாலும் எஸ்.பி.பியின் திறமைக்கு அருகில் நெருங்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் 100இல் ஒரு பங்கு கூட அவர்களால் செய்ய முடியாது. வாழ்க எஸ்.பி.பியின் புகழ்" என்று பேசி உள்ளார். அவரது குரல் பதிவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications