செம.. இந்திய நாடே முதலாளி.. ரஜினி பட பாடல் மெட்டில் கொரோனாவுக்கு எதிராக இணைந்த எஸ்பிபி & வைரமுத்து!
சென்னை: ஒருவன் ஒருவன் முதலாளி மெட்டில் வைரமுத்து வரிகளில் எஸ்பிபி குரலில் ஒலிக்கும் கொரோனாவுக்கு எதிரான பாடல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
உலகையை உருட்டி மிரட்டி மண்டி போட வைத்திருக்கிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸின் கோரப்பிடியில் சிக்கி இதுவரை உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
உலகம் முழுக்க 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் 9 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு நீட்டிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தடுக்கும் வகையில் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இந்த ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊரடங்கை 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளன.

பிரதமர் உரை
இந்நிலையில் பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு மக்கள் மத்தியில் மீண்டும் உரையாற்ற உள்ளார். அப்போது நாடு முழுக்க ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸுக்கு இன்னும் தடுப்பு மருந்தோ அல்லது சிகிச்சை மருந்தோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் அதனை எதிர் கொள்வது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

சங்கீத சேது
அரசின் ஊரடங்கு உத்தரவையும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளையும் பின்பற்ற கோரி பிரபலங்கள் பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசாருக்காக இந்தியாவின் முன்னணிப் பாடகர்கள் பங்குபெற்ற ‘சங்கீத சேது' என்னும் ஆன்லைன் இசைக் கச்சேரி நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை இந்தியப் பாடகர்கள் உரிமை கூட்டமைப்பான இஸ்ரா நடத்தியது.
தூர்தர்ஷன் யூட்யூப்
இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர், கே.ஜே.யேசுதாஸ், ஹரிஹரன், ஆஷா போஸ்லே, ஷங்கர் மகாதேவன், உதித் நாராயணன், பங்கஜ் உதாஸ், அல்கா யாக்னிக், சோனு நிகம், கைலாஷ் கேர், ஷான் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி பாடகர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன் லைன் மூலம் பாடல்களைப் பாடினர். இந்நிகழ்ச்சி தூர்தர்ஷன் சேனலின் யூடியூப் சேனலில் லைவ் செய்யப்பட்டது.

இந்திய நாடே முதலாளி
இந்த நிகழ்ச்சியில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ‘முத்து' படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலின் மெட்டில் ‘இந்திய நாடே முதலாளி' எனத் தொடங்கும் பாடலை பாடினார். ‘ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்துதான் இந்தப் பாடலையும் எழுதியுள்ளார்.

கவிப்பேரரசர்தான்
இப்பாடலில் இடம்பெற்றுள்ள கொரோனாவுக்கு எதிரான ஒவ்வொரு வார்த்தையும் வரிகளும் வைரமுத்துவை ஒரு மாபெரும் கவிஞன்.. கவிப்பேரரசர்தான்.. என்பதை மீண்டும் நிரூப்பிக்கும் வகையில் உள்ளது. அத்தனை வரிகளும் கொரோனாவில் இருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையை தரும் வகையில் உள்ளது.

பிள்ளைகள் போலே
இந்திய நாடே முதலாளி.. இந்தியர் எல்லாம் தொழிலாளி என தொடங்கும் அப்பாடலில் உள்ள, விண்ணில் காணும் மீன்களை போலே.. விலகி வாழ்வோம் பூமியின் மேலே.. அன்னைக் கருவில் பிள்ளைகள் போலே.. அடங்கி வாழ்வோம் அரசின் பின்னாலே.. என்ற வரிகள் அசர வைத்துள்ளது.

இந்திய நாடு வீழாது..
சோஷியல் டிஸ்டன்ஸ் மற்றும் லாக்டவுனின் காலத்தின் முக்கியத்துவத்தை கூறும் வகையில் இந்த பாடல் வரிகள் உள்ளன. நாடு காக்கும் நல்லவருக்கெல்லாம் நன்றி நன்றி சொல்லுகின்றோம்.. கொரோனா தொடர்ந்து வாழாது.. இந்திய நாடு வீழாது.. என்று உயிரை துட்சமென கருதி மருத்துவ மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டும்..
ஏஆர் ரஹ்மான் இசையில் ஏற்கனவே கேட்டப் பாடலின் மெட்டுதான் என்றாலும் புது வரிகளுடன் எஸ்பிபி குரலில் மீண்டும் மீண்டும் கேட்க வைத்துள்ளார் வைரமுத்து. தற்போது இந்தப் பாடல் வைரமுத்துவின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. இப்பாடலை பலரும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











