SPB: பாடும் நிலா பாலுவின் 3-வது நினைவு தினம்... மரணத்தின் வலியை உணர்த்திய SPB-இன் 5 பாடல்கள்!
சென்னை: இந்தியத் திரையிசையின் மகத்தான ஆளுமை எஸ்பி பாலசுப்ரமணியத்தின் 3வது நினைவு தினம் இன்று.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்பிபி.
கடந்த 2020ம் ஆண்டு கொரொனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி, மருத்துவமனையில் உயிரிழந்தார்.
எஸ்பிபியின் நினை தினத்தை முன்னிட்டு, அவரது குரலில் மரணத்தின் வலியை உணர்த்திய 5 பாடல்களை இங்கே பார்க்கலாம்.

மரணத்தின் வலியை உணர்த்திய SPB-இன் 5 பாடல்கள்: தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் பல்லாயிரம் பாடல்களைப் பாடியவர் எஸ்பிபி எனப்படும் எஸ்பி பாலசுப்ரமணியம். இசை ரசிகர்களின் பாடு நிலாவாக கடந்த 50 ஆண்டுகளாக வலம் வந்த எஸ்பிபி, 2020ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி உயிரிழந்தார். இசையுலகம் மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது எஸ்பிபியின் மரணம். அவரது நினைவு நாளில், மரணத்தின் வலியை உணர்த்திய பாடல்களை காணலாம்.
வானம் தொட்டுப் போன: எஸ்பிபியின் குரலில் மரணத்தின் வலியை உணர்த்திய பாடல்களில், இதுதான் பெரும்பாலான ரசிகர்களின் விருப்பம் எனலாம். தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற 'வானம் தொட்டுப் போன' பாடல் தான் அது. இந்தப் பாடலில் குறிப்பிட்ட ஒரு சாதி பற்றிய வரிகள் இருப்பினும், ஒரு ஊரின் பெரியவர் உயிரிழக்கும் போது, அங்குள்ள மக்களின் துயரை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கும். இளையராஜா இசையில் எஸ்பிபியின் குரலில் உருவான இந்தப் பாடலின் ஆன்மா, ரசிகர்களை அப்படியே கலங்கடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அன்ப சுமந்து சுமந்து: இந்த வரிசையில் பொன்னுமனி படத்தில் இடம்பெற்ற 'அன்ப சுமந்து சுமந்து' பாடல் முக்கியமானது. கார்த்திக் தனது தாய்மாமன் சிவகுமாரின் மறைவால் கலங்கிப் போய் பாடுவதாக இந்தப் பாடல் உருவாகியிருக்கும். இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய இந்தப் பாடல், மரணத்தின் வலியை அப்படியே ரசிகர்களிடம் கடத்தியது. எஸ்பிபியின் குரலில் காலத்துக்கும் மறக்க முடியாத ஒரு பாடலாக இதனைக் குறிப்பிடலாம்.
காதல் தேடி வந்த காளை: மோனிஷா என் மோனாலிசா படத்தில் இடம்பெற்ற 'காதல் தேடி வந்த காளை' பாடல், எஸ்பிபியின் ரசிகர்களுக்கு இன்னொரு துயர ராகம் எனலாம். காதல் கை கூடி வரும் நேரத்தில் காதலன் இறந்துவிட, அவனது முகத்தைப் பார்க்க நாயகி போராடும் துயரத்தையும், மரணத்தின் வலியையும் ஒருசேர தனது குரலில் விருந்து படைத்தார் எஸ்பிபி. டிஆர் ராஜேந்திரன் இசையில் எஸ்பிபி பாடிய சிறந்த பாடல்களிலும் இது ரொம்பவே தனித்துவமானது.
வந்தனம் என் வந்தனம்: இந்த வரிசையில் வாழ்வே மாயம் படத்தில் இடம்பெற்ற 'வந்தனம் என் வந்தனம்' பாடலும் ரசிகர்களின் ஃபேவரைட் எனலாம். கேன்சரால் பாதிக்கப்பட்ட கமல், காதலியான ஸ்ரீதேவி தன்னைவிட்டு பிரிந்து போக வேண்டும் என்பதற்காக, தனக்குத் தானே மரண கீதம் பாடுவதாக உருவாகியிருக்கும். இந்தப் பாடலும் இளையராஜா - எஸ்பிபி காம்போவில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
தேவதை இளம் தேவி: எஸ்பிபியின் குரலில் ஆயிரம் நிலவே வா படத்தில் இடம்பெற்ற 'தேவதை இளம் தேவி' பாடலும் இந்த வரிசையில் இடம்பெறும். இளையராஜா இசையில் எஸ்பிபியின் குரலில் உருவான இந்தப் பாடல் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் தவிர்க்க முடியாதது.


Click it and Unblock the Notifications











