SPB Top 10 Songs: ரசிகர்களை மெய்மறக்கச் செய்த SPB-இன் டாப் 10 பாடல்கள்!
சென்னை: இசை ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பிபி.
இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 50000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
2020ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்த எஸ்பிபிக்கு இன்று 77வது பிறந்ததினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எஸ்பிபியின் மிகச் சிறந்த தமிழ்ப் பாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பாடு நிலா SPB-ன் சிறந்த 10 பாடல்கள்:
இசையுலகின் வாழ்நாள் பொக்கிஷம் என்றால் அது எஸ்பிபி ஆகவே இருக்க முடியும். சுமார் 50 ஆண்டுகளில் 50000 பாடல்களைப் பாடி அனைத்து மொழி ரசிகர்களுக்கும் இசை ரட்சகனாக வாழ்ந்து மறைந்துள்ளார். எஸ்பிபி மறைந்து மூன்று ஆண்டுகள் ஆனபோதும் கூட அவரை ரசிகர்கள் இன்னும் உணர்வுப்பூர்வமாக மறந்துவிடவில்லை என்பதே உண்மை. மறக்கவே முடியாது என்பதையும் யாரும் மறுத்துவிட மாட்டார்கள்.
எஸ்பிபி பாடிய பாடல்களில் புதைந்திருக்கும் அவரது ஜீவன் தான் எத்தனை அதிசயங்கள் நிறைந்தது. பல்வேறு உணர்ச்சிக் குவியல்கள் நிறைந்த மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தில் எஸ்பிபி தனியொரு உணர்வாகவே ஊடுருவி விட்டார் என்றால் அது மிகையல்ல. பாடகராக மட்டுமல்லாமல் ஒரு மனிதனாக இச்சமூகத்தின் மீது அவர் காட்டிய கருணையும் அன்பும் மகத்தானதன்றோ. அத்தகைய சிறப்புகள் நிறைந்த எஸ்பிபியின் சிறந்த 10 பாடல்களை இங்கே காணலாம்.
1. ஆயிரம் நிலவே வா: என இளமை ததும்பும் குரலில் பாடி இசையுலகில் அறிமுகமானார் எஸ்பிபி. எல்லா பாடகர்களுக்கும் அவர்களது முதல் பாடல் சிறப்பாக அமைந்துவிடாது. ஆனால், எஸ்பிபி ஒரு ஜீனியஸ் என்பதாலேயே 'ஆயிரம் நிலவே வா' பாடல் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இந்தப் பாடலை எஸ்பிபி பாடுவதற்கு அரைகுறை மனதுடன் சம்மதம் சொன்ன எம்ஜிஆர், பாடல் வெளியானதும் எஸ்பிபியை வாஞ்சையோடு அணைத்துக்கொண்டது தற்செயல் அல்ல, அது வரலாறு.
2. இளமை என்னும் பூங்காற்று: பாடல் SPB-ன் தனித்துவமான குரலுக்கு எடுத்துக்காட்டாக உருவானது எனலாம். 1979ம் ஆண்டு வெளியான பகலில் ஒரு இரவு படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை SPB-ன் எவர்கிரீன் ஹிட் லிஸ்ட்டில் வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள். இளையராஜாவும் - SPB-ம் இணைந்து மெலடியாக ஒரு பாடல் கொடுத்தால், 'இளமை என்னும் பூங்காற்று' பாடலில் நாயகனின் தீண்டலில் தன்னை இழந்து சொக்கிக் கிடக்கும் ஸ்ரீதேவி போல ரசிகர்களும் மெய்மறந்துவிடுவார்கள் என்பதே எழுதப்படாத விதி.
3. SPB-ன் கோல்டன் மெலடி: என்ற வரிசையில் இந்தப் பாடலை சேர்க்காமல் விடவே முடியாது. உல்லாசப் பறவைகள் படத்தில் வரும் 'ஜெர்மனியின் செந்தேன் மலரே' பாடல் தான் அது. இளையராஜாவின் வெஸ்டர்ன் இசையில் எஸ்பிபியும் ஜானகியும் இணைந்து ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்கள். "பூஞ்சோலையே பெண்ணானதோ இரு பொன்வண்டுகள் கண்ணானதோ" என எஸ்பிபி பாடும் இந்த வரிகள் கேட்பவர்களை சிறகடிக்க வைக்காமல் இருக்காது.
4. ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்: பாடல் எஸ்பிபி-யின் மாஸ்டர் கிளாசிக்கல் எனலாம். எஸ்பிபி பாடுவதற்காகவே இப்படியொரு பாடலை டி. ராஜேந்தர் உருவாக்கினாரோ என்ற சந்தேகம் வரும். டி ராஜேந்தர் இசையில் எஸ்பிபி பாடிய அதிஅற்புதமான பாடலில் 'ஒரு பொன் மானை நாண் காண தகதிமிதோம்' ரொம்பவே முக்கியமானது. "தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரைப் பூ மீது விழுந்தனவோ இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ" என முதல் சரணத்திலேயே ரசிகர்களை தனது குரலால் வீழ்த்தியிருப்பார் எஸ்பிபி.
5. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ: எஸ்பிபியின் ரசிகர்களால் காலத்துக்கும் கொண்டாடப்படும் பாடல். இளையராஜா, எஸ்பிபி, மணிரத்னம் என்ற மேஜிக்கல் காம்போவில் உருவான இந்தப் பாடல் இப்போதும் காதலர்களின் சோககீதமாக ஒலித்து வருகிறது. பாடலின் ஆரம்பத்தில் உச்சஸ்தாயில் எஸ்பிபி கொடுக்கும் அந்த ஹம்மிங் வெறுமையில் திளைத்திருப்பவர்களை தலைக்கோதி அரவணைக்கும் தாலாட்டுக்கு நிகரானது.
6. அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி: பாடல் எஸ்பிபி - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் ரசிகர்களின் காதல் கீதமாக கொண்டாடப்படுகிறது. டூயட் படத்தில் இடம்பெற்ற 'அஞ்சலி அஞ்சலி' எஸ்பிபியின் ஃபேவரைட் பாடல்களில் மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் இசையும் எஸ்பிபியின் குரலும் சேர்ந்து சிலிர்க்கும் அனுபவத்தை கொடுத்தது.
7. வண்ணம் கொண்ட வெண்ணிலவே: பாடல் எஸ்பிபியின் ரசிகர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் என சொன்னால் மிகையாகாது. எஸ்பிபி இசையில் அவரே பாடிய இந்தப் பாடலை கேட்கும் போது இனம்புரியாத உணர்வுகள் மேலோங்குவதை யாராலும் தடுக்க முடியாது. இப்பாடலின் ஒவ்வொரு வரியிலும் எஸ்பிபியின் ஆன்மா முழுக்க முழுக்க இசையால் மட்டுமே நிரம்பியிருக்கும்.
8. தங்கத் தாமரை மகளே: பாடல் ஏஆர் ரஹ்மான் - எஸ்பிபி கூட்டணியில் இன்னொரு மேஜிக்கலாக அமைந்தது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் எஸ்பிபிக்கு தேசிய விருதை வென்று கொடுத்தது. இந்தப் பாடலை ஹஸ்கியான குரலில் செம்ம செக்ஸியாக பாடி இளம் பாடகர்களுக்கே டஃப் கொடுத்திருப்பார் எஸ்பிபி. 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பாடலான இது எஸ்பிபியின் சிறந்த 10 பாடல்களில் கண்டிப்பாக இடம்பெறவேண்டியதே.
9. கர்ணா படத்தில் வரும் மலரே மெளனமா பாடல்: எஸ்பிபி கேரியரில் கல்ட் கிளாசிக்கலாக அமைந்தது. கர்ணா படத்திற்காக வித்யாசகர் இசையில் தனது மொத்த ஆன்மாவையும் உருக்கி பாடியிருப்பார் எஸ்பிபி. அவரும் ஜானகியும் இணைந்து நிகழ்த்திய மற்றுமொரு மாயாஜாலம் இப்பாடல். எஸ்பிபியே பல தருணங்களில் இந்தப் பாடல் குறித்து சிலாகித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
10. அய்யயோ நெஞ்சு அலையுதடி: என ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் எஸ்பிபி ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் கண்டிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒருவிதமான ஏக்கம் நிறைந்த தவிப்போடு காதலை சொல்லும் இந்தப் பாடலை எஸ்பிபி தனது குரலால் கிறங்கடிக்கச் செய்திருப்பார். கூடவே அவரது மகன் எஸ்பிபி சரணும் கோரஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்திருப்பார்கள்.


Click it and Unblock the Notifications











