Spider-Man: Brand New Day: ஸ்பைடர் மேன் ஷார்ப் டீடைல்ஸ்.. அடுத்த வாரம் ரிலீஸ்.. இதெல்லாம் தெரிஞ்சுக்காங்க
சென்னை: ஹாலிவுட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்களில் ஒன்றாக இருக்கும் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' (Spider-Man: Brand New Day) படம் வரும் ஜூலை 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. டாம் ஹாலண்ட் மீண்டும் ஸ்பைடர் மேனாக நடிக்கும் இந்தப் படத்தின் இந்திய சென்சார் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து படத்தின் சான்றிதழ், ரன் டைம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்வெல் ஸ்டுடியோஸ், பாஸ்கல் பிக்சர்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ளார். டாம் ஹாலண்ட், ஜெண்டயா, ஜேக்கப் படாலன், சாடி சிங், ஜான் பெர்ன்தல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்தப் படம், ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இதில் என்ன கதை: கடந்த 'நோ வே ஹோம்' படத்தின் முடிவில், டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் மந்திரத்தால் உலகமே பீட்டர் பார்க்கரை மறந்து விடுகிறது. அந்த சம்பவத்துக்குப் பிறகு அவரது வாழ்க்கையில் என்ன நடக்கிறது, புதிய எதிரிகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதையே இந்தப் படம் பேசுகிறது. ஆக்ஷன், சாகசம், உணர்வுப்பூர்வமான தருணங்கள் என ரசிகர்களுக்காக பல சர்ப்ரைஸ்களுடன் படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சென்சார்: இந்த நிலையில், இந்திய மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) படத்தை பார்த்து சான்றிதழ் வழங்கியுள்ளது. சில காட்சிகள் மற்றும் வசனங்களில் சிறிய மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, படக்குழு அவற்றை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு படத்திற்கு எந்த கட்டும் இன்றி ரிலீஸ்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு UA 13+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாகப் பார்க்கலாம் என்றும், அதற்கு குறைவான வயதுடையவர்கள் பெற்றோரின் மேற்பார்வையுடன் படம் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைக்கதை: அதேபோல் படத்தின் ரன் டைம் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளது. அதாவது படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள், அதாவது 145 நிமிடங்கள் ஓடும் வகையில் படம் உருவாகியுள்ளது. வழக்கமான மார்வெல் படங்களைப் போலவே ஆக்ஷன் காட்சிகள், விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் நகைச்சுவை கலந்த திரைக்கதை இந்தப் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வெளியான டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது சென்சார் பணிகளும் நிறைவடைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. உலகளவில் வசூல் சாதனை படைக்கும் மார்வெல் படங்களின் பட்டியலில் 'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' புதிய சாதனையை படைக்குமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications