CM விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து குறித்த கேள்வி.. ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப சொன்ன சூப்பர் ஸ்டார்
சென்னை: முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இப்படி இருக்கையில், அந்த விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த்திடம் நேரடியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள 'தர்மன்' திரைப்படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை அதாவது ஜூன் 25ஆம் தேதி தொடங்க உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பின்னர் காரில் புறப்பட்டுச் செல்லும்போது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அப்போது, "முதலமைச்சர் விஜய்க்கு நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறதே?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு உடனடியாக பதிலளித்த ரஜினிகாந்த், "பேசீட்டேன்... பேசீட்டேன்..." என்று ஒரே வார்த்தையை இரண்டு முறை கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ரஜினிகாந்த்தின் இந்த சுருக்கமான பதில் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படி இருக்கையில், 'தர்மன்' பட விழாவில் ரஜினிகாந்த் பேசிய சில கருத்துகளும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன. அதாவது மேடையில் பேசிய அவர், "என்னை பேச அழைக்கிறோம் என்று சொன்னாலே எனக்கு பயமாக இருக்கிறது. ஏனென்றால் நான் பேசினால் ஏதாவது ஒரு பிரச்சினை வந்துவிடுகிறது. ஒன்று எனக்கு பிரச்சினை வரும், இல்லை என்றால் மற்றவர்களுக்கு பிரச்சினை வரும்" என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "சமூக வலைதளங்களில் எதையாவது கிளப்பிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். நான் அமைதியாக இருந்தால், இவர் ஏன் பேச மாட்டேங்குறார் என்று கேட்பார்கள். பேசினால், இதைப் பற்றி பேசுங்க, அதைப் பற்றி பேசுங்க என்று சொல்வார்கள்" என்றும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாமல், "நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எதை செய்தாலும் பிடிக்காது. அதேபோல நம்மை பிடித்தவர்களுக்கு நாம் எதை செய்தாலும் பிடிக்கும் என்று நினைப்பதும் தவறு. அதனால் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை நான் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன்" என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து விவகாரம் குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த "பேசீட்டேன்... பேசீட்டேன்..." என்ற பதிலையும், மேடையில் அவர் பேசிய கருத்துகளையும் இணைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
எது எப்படியோ... ஒரு சில வினாடிகள் மட்டுமே நீடித்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஒரே வார்த்தையை இரண்டு முறை கூறிய ரஜினிகாந்தின் பதில் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications