twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாற்றே இல்லாத கலையரசி - ஸ்ரீதேவி

    By Shankar
    |

    Recommended Video

    அனைவரின் மனதிலும் கனவுக்கன்னி ஸ்ரீதேவி-வீடியோ

    - கவிஞர் மகுடேசுவரன்

    ஸ்ரீதேவியைத் திரையில் பார்ப்பதற்கு முன்பாகவே குமுதம், ராணி ஆகிய இதழ்களின் அட்டைப் படங்களில் பார்த்திருந்தேன். அந்த அழகுக்கு மலர்களின் மலர்ச்சியை நேர்வைக்கலாம். என் தந்தையாரின் விருப்ப நாயகியும் அவரே. அவருடைய திரைப்பட விருப்பச் சாய்வுகளை இன்றைக்கும் என்னால் நன்கு நினைவுகூர முடிகிறது. அவற்றிலிருந்தே ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளின் இறுதியில் பிறந்த ஒருவரின் மனத்தை அடைகிறேன். 'முத்துக்கு முத்தாக... சொத்துக்குச் சொத்தாக...' பாடலைக் கேட்டால் தானாக அழக் கூடியவர். ஸ்ரீதேவியின் திரைப்பட ஈர்ப்பு அக்காலத்து இளைஞர்களைப் பிசாசுபோல் பிடித்தாட்டியிருக்கிறது.

    என் தாயார்க்கும் ஸ்ரீதேவியைப் பிடிக்கும். ஊர்ப்புறப் பெண்களின் உரையாடல் வரைக்கும் ஸ்ரீதேவியின் பெயர் இடம்பெற்றுவிட்டது. "பொண்ணு ஸ்ரீதேவி மாதிரி அழகு... உயரமில்லன்னாலும் மூக்கும் முழியும் அப்படியே ஸ்ரீதேவியாட்டம்தான்..." என்று பேசிக்கொள்வார்கள். மணப்பெண்ணை ஸ்ரீதேவியோடு ஒப்பிடும் அந்தப் பழக்கம் இன்றைக்கும் இங்கே நிலவக் காணலாம். பிற்காலத்தில் ஸ்ரீதேவி வகித்த மணப்பெண்ணுக்கான உவமையை அம்பிகா பிடித்தார். "பொண்ணு அம்பிகாளாட்டம்தான்... ஆனா கொஞ்சம் பூசுனாப்பல ஒடம்பு..." இங்கே ஆகார ஈற்றில் முடியும் பெண் பெயர்களுக்கு 'அள்' விகுதி சேர்த்துக்கொள்வார்கள். மொழி இயற்கை அப்படித்தானே இருக்கிறது! "சுசீலாளைக் கூப்பிட்டம்ங்கொ... லதாளுக்குத் தெரியாதுங்கொ...," என்பார்கள். அம்பிகாள், சுசீலாள், லதாள், ராதாள்.

    Sridevi, an unparellel artist

    ஊர்ப்புறக் கீற்றுக்கொட்டகையில் 'கல்யாணராமன்' திரையிடப்பட்டிருந்தது. 'ஆகா வந்துருச்சு... ஆசையில் ஓடிவந்தேன்...' என்னும் பாட்டு ஊரெங்கும் தொற்றுக் காய்ச்சல்போல் பரவிக்கொண்டிருந்தது. படம் பார்க்கப்போய் நுழைவு கிடைக்காமல் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மிதிவண்டியில் நான் முன்கம்பியில் அமர்ந்துகொள்ள, பின்னிருக்கையில் என் தாயார். இரண்டாவது ஆட்டம். அரைமணி நேரம் மிதித்துச் சென்று அந்தக் கீற்றுக்கொட்டகையில் அமர்த்தினார் எந்தையார். 'மலர்களில் ஆடும் இளமை புதுமையே... மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே... ஹோய்... பருவம் சுகமே... பூங்காற்றே நீ பாடு...' என்று ஸ்ரீதேவி ஆடிப்பாடித் தோன்றியபோது அவரை விழிவிரியப் பார்த்தோம். ஸ்ரீதேவியை நான் திரையில் பார்க்கையில் பள்ளி செல்லும் அகவையில்லை. ஆனால், அந்தக் காட்சியும் முகத்தருகு கோணங்களும் இன்னும் நினைவை விட்டகலவில்லை. கல்யாணராமன் திரைப்படத்தில் அவர்க்குக் குறிப்பிடத்தக்க நான்கு காட்சிகள். செண்பகமாய் ஆடிப்பாடும் இளையவள். கல்யாணத்தின் இறப்பின் பின் பித்துப் பிடித்தவளாய்த் திரிபவள். இராமனின் நினைவால் ஒரு மோகப்பாடல். அந்த வரம்புக்குள்ளாகவே அப்படத்தின் முதன்மை ஈர்ப்பாய் மாறி நின்றவர்.

    Sridevi, an unparellel artist

    ஸ்ரீதேவி நடித்த பற்பல படங்களும் நாயகியின் அழகைப் பயன்படுத்திக்கொண்ட நாயகத் திரைப்படங்கள். அவற்றில் ஸ்ரீதேவியிடம் பார்வையாளர்களுக்குத் தோன்றிய மையல் இன்னொரு தடமாக நீண்டது. மூன்று முடிச்சு என்னும் கறுப்பு வெள்ளைப் படத்தில் நாயகியாய் அறிமுகமாகி, பதினாறு வயதினிலே என்னும் பன்னிறப் படத்தின் நாயகியாய்த் தொடர்ந்த அந்தக் காலகட்டம் திரையில் நிறப் பரிமற்றம் நிகழ்ந்த இடைக்காலம். கறுப்பு வெள்ளையில் அழகாகத் தோன்றியவர் பன்னிறப் படங்களில் எடுபடாமல் போய்விடுவதற்கு வாய்ப்புண்டு. அத்தகைய குழப்பத்திற்குப் பலர் பலியாயினர். சுமித்திரா, ஜெயசுதா போன்றவர்கள் பன்னிறப் படங்களில் தோன்றியதைவிடவும் கறுப்பு வெள்ளையில் நன்றாக இருந்தனர். கே.ஆர். விஜயாவும் எல்லாரைப்போலவேதான் சிரித்தார். ஆனால், கறுப்பு வெள்ளையில் பதிவான அந்தச் சிரிப்புத்தான் அவரைப் புன்னகை அரசியாக்கிற்று. திரையீட்டில் நிகழ்ந்த இத்தகைய மாற்றங்கள் ஸ்ரீதேவியின் முன்னேற்றத்திற்கு உதவும் காரணங்களாயின.

    அந்தக் கால நடிகையர் பலரும் சொந்தக் குரலில் பேசியிருப்பதைக் கவனிக்கலாம். நடிப்பவரின் குரல்தான் நடிப்புக்கு மிகவும் இன்றியமையாதது. நடிப்பில் தளர்ந்த இடங்களில் குரலால் ஈடுகட்டலாம். பெரும்புகழ் பெற வேண்டுமானால் சொந்தக் குரல் கட்டாயம். பாக்கியராஜின் பழைய படங்கள் சிலவற்றுக்குக் கங்கை அமரன் குரல் கொடுத்திருப்பதைப் பார்க்கையில் அப்பட்டமான செயற்கையை உணர்கிறோம். ஸ்ரீதேவி தாம் நடித்த திரைப்படங்களில் சொந்தக் குரலில் பேசினார். அவருடைய குரலில் இருந்த குழந்தைத்தனமும் குறும்பும் எல்லார்க்கும் பிடித்துப் போயின. சரிதாவின் குரல் அளவுக்கு இனிமையில்லைதான் என்றாலும் அக்குரலில் பெண்மை நிறைந்திருந்தது.

    Sridevi, an unparellel artist

    பதினாறு வயதினிலே திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் கண்கள் நடித்திருக்கும். முகத்தருகு கோணங்களில் (குளோசப்) ஒருவரால் நுண்ணிய மெய்ப்பாடுகளை வெளிக்காட்ட முடிகிறது என்றால் அவர் திரைவானின் தவிர்க்க முடியாத விண்மீனாவதை யாரும் தடுக்க முடியாது. அதற்கு அத்தகைய கோணங்களில் ஒரு காட்சியை அமைத்து அதை உணர்ச்சித் தளத்தில் பிசகின்றி நகர்த்தக்கூடிய இயக்குநர் வேண்டும். ஸ்ரீதேவிக்கு அத்தகைய இயக்குநர்கள் வாய்த்தார்கள். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா - இம்மூவரின் தலையாய படைப்புகளிலும் இடம்பெற்றார்.

    ஸ்ரீதேவியின் கண்கள் இலக்கியங்களில் கூறப்பட்ட விவரிப்புகளை நினைவுபடுத்துபவை. இடுங்கிய சிறு கண்கள் நடிப்புக்குக் குறை. கண்கள் பெரிதாய் அமைந்துவிட்டால் போதும், பார்வையால் ஆயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். ஸ்ரீதேவியின் கண்ணழகைக் காட்டுவதற்கென்றே பதினாறு வயதினிலே திரைப்படத்தில் ஒரு காட்சித் துணுக்கு இடம்பெற்றது. 'ஆத்துல காத்தடிச்சா அலையோடும்... அலையோடும்...' என்று பாடும் சப்பாணி அடுத்த அடி தெரியாமல் தடுமாறித் தங்குவார். அடுத்த சுடுவில் ஸ்ரீதேவி தம் கண்களால் உருட்டி விழித்து இமைகளைப் படபடவென்று இமைப்பார். அதைப் பார்த்ததும் சப்பாணிக்கு அடுத்த அடி நினைவுக்கு வந்துவிடும். 'கெண்டை விளையாடும்...' என்று தொடர்வார். மயிலின் கண்கள் கெண்டை மீன்களைப்போல் இருந்தனவாம். அவள் கண்களைப் பார்த்ததும் சப்பாணிக்கு அடுத்த அடி நினைவுக்கு வந்துவிட்டதாம்.

    வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில் ஸ்ரீதேவிக்கு எளிய தோற்றம். வெளிக்காட்ட முடியாத துன்பங்களால் அலைக்கழிக்கப்படும் நாடக நடிகை. 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது... திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி...' பாடலைக் கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் மெட்டும் பாட்டும் முறையில் பாடும் காட்சி. அவற்றிடையே இருவரும் போட்டி போட்டு நடித்துச் செல்வார்கள். காதலைத் தெரிவிப்பதற்கு முன்னுள்ள மனநிலை இருவர்க்கும். அப்போது தொடங்கும் பாடல் காதலைத் தெரிவித்து அணைத்துக்கொண்ட நிலையில் முடிவது. தன் காதலன் மார்பில் நாணிப் புதையும் காதலி அவனை நேர்காணாமல் மேலும் மார்பை இழுத்துப் புதையும் செல்லநிலை. அது இயக்குநர் கற்பனை செய்தோ, எழுதியோ எடுக்கப்பட்ட காட்சியில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. நடிப்பு என்னும் தடையை மீறி அக்கலைஞர்களுக்குள் நேர்ந்துவிட்ட இளக்கம் அது.

    மூன்றாம் பிறையில் வளர்ந்த உடலுக்குள் குழந்தைமையைத் திணித்து நடித்து ஒற்றைத் தனியாளாக மிளிர்ந்தார். முடிவுக் காட்சியில் இருப்பூர்தியில் அமர்ந்திருந்த விஜியின் பார்வையில் தெறித்துச் சிதறிய அந்நியத்தைப் பொறுக்க முடியாமல் கதறியவன் சீனு மட்டுமா? நாமும்தான். உதகமண்டலம் சென்று கேத்தி இருப்பூர்தி நிலைய மண்ணிலும் மரநிழலிலும் மணிக்கணக்கில் அமர்ந்து பார்த்துவிட்டேன். அந்தத் துயரத்தைக் கடக்க முடியவில்லை.

    இன்றைக்கு ஸ்ரீதேவி நம்மிடையே இல்லை. ஒரு நடிகையாய் அவர் எண்ணற்ற வாழ்க்கைத் திருப்பங்களைப் பார்த்திருக்கலாம். தான் வளர்ந்த தமிழகத்திலிருந்து வெளியேறி வட இந்தியப் புகழுக்குள் குடியேறி இருக்கலாம். ஆனாலும் இங்கே அவர் பதித்துச் சென்ற கலைத்தடங்கள் அழுத்தமானவை. நம் மண்ணிலிருந்து சென்றவர் நாடளாவிய தாரகை ஆனதும் அங்குள்ளோரால் ஏற்றுக்கொண்டாடப்பட்டதும் நமக்குப் பெருமைதான். எப்படி ஸ்ரீதேவி இங்கிருந்து சென்ற பின்னாலும் அவ்விடம் வெற்றிடமாகவே இருந்ததோ, அவ்வாறே அங்கும் அவர் விட்டுச்சென்ற இடம் நிரந்தர வெற்றிடமாகவே இருக்கும். சிலவற்றுக்கும் சிலர்க்கும் மாற்று என்பதே இல்லை.

    English summary
    Poet Magudeswaran's rich tribute to late legend Sridevi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X