அப்பாட்ட தேசிய விருது மட்டும் இல்லை நான் வாங்கிட்டேன்.. கண் கலங்கிட்டாரு.. மனம் திறந்த ஸ்ரீகாந்த் தேவா
சென்னை: Srikanth Deva (ஸ்ரீகாந்த் தேவா) தேசிய விருது வென்றது குறித்து இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா நெகிழ்ச்சியுடன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த படமாக ராக்கெட்ரி படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக அல்லு அர்ஜுன் (புஷ்பா), சிறந்த நடிகையாக ஆலியா பட் (கங்குபாய் கத்தியவாடி), சிறந்த இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் (புஷ்பா) ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டிருக்கின்றனர். சிறந்த படமாக ஜெய் பீம் தேர்ந்தெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

கடைசி விவசாயி: அதேசமயம் ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் தமிழில் கடைசி விவசாயி படத்துக்கும், அதில் நல்லாண்டிக்கும் தேசிய விருது கிடைத்திருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழ் திரைத்துறையையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதைத் தாண்டி தமிழில் வேறு எந்த படத்துக்கும் எந்த பிரிவிலும் விருது கிடைக்கவில்லை.
நான் ஃபியூச்சர்டு பிலிம்ஸ்: அதேசமயம் நான் ஃபியூச்சர்டு பிலிம்ஸ் கேட்டகிரியில் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. அதன்படி சிறந்த கல்வி படமாக சிற்பிகளின் சிற்பங்கள் படம் தேர்வாகியுள்ளது. அதேபோல் சிறந்த இசையமைப்பாளராக ஸ்ரீகாந்த் தேவா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து சிற்பிகளின் சிற்பங்கள் படக்குழுவினருக்கும், ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
ஸ்ரீகாந்த் தேவா பேட்டி: இந்நிலையில் விருது வென்றது குறித்து பேசிய ஸ்ரீகாந்த் தேவா, "கருவறை குறும்படத்திற்காக நைட் 9 மணிக்கு வேலையை ஆரம்பித்து காலை 3 மணிக்கு முடித்தோம்.ரொம்பவே ஹார்டு ஒர்க் செய்தோம். அப்படி ஹார்டு ஒர்க் செய்து வேலையை முடித்த மன திருப்தியில்தான் நாங்கள் இருந்தோம்.
எனக்கு தெரியாது: இந்த குறும்படத்தை தேசிய விருதுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்பதே எனக்கு தெரியாது. இன்று தேசிய விருது அறிவிக்கப்பட்டவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விருதை அறிவித்த பிறகு அப்பாவை சந்தித்தேன். அவர் ஒரு மாதிரி கண் கலங்கிட்டாரு. என் அப்பாவிடம் இல்லாத விருதுகளே இல்லை. ஆனால் தேசிய விருது மட்டும் அவருக்கு அமையவில்லை.
நிறைவாக இருக்கிறது: அந்த விருதை நான் வாங்கியதும் அவரே பத்து விருதுகள் வாங்கியது போல் ரொம்பவே ஃபீல் பண்ணினார். அது எனக்கு ரொம்பவே மன நிறைவாக இருந்தது. இந்த விருதை வாங்கி அவருடைய கைகளில் கொடுக்க வேண்டும். அதுதான் என்னுடைய கனவு" என்றார். அவரது இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ஸ்ரீகாந்த் தேவா: ஸ்ரீகாந்த் தேவா தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, நேபாளி, சிவகாசி, ஏய், பம்பர கண்ணாலே, சரவணா, தர்மபுரி, ஈ, தலைமகன், பழனி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பல வருடங்களாக இசையமைத்துவந்தாலும் சரியான அங்கீகாரம் அவருக்கு கிடைக்காமல் இருந்தது. தற்போது தேசிய விருது மூலம் அவருக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











