நீ எல்லாம் நடிகையானு கேட்டாங்க.. திருநங்கைனு சொன்னாங்க.. தினசரி பட ஸ்ரீகாந்த் ஜோடி வேதனை!
சென்னை: நடிகர் ஸ்ரீ காந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் அடுத்து வெளியாகவுள்ள படம் தினசரி. இந்தப் படத்தினை அமெரிக்காவைச் சேர்ந்த தயாரிப்பாளரான சிந்தியா தயாரித்தது மட்டும் இல்லாமல், படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் வர்ணாசிரம் என்ற படத்தினை தயாரித்து அதில் முக்கிய கதாபாத்திரமாகவே நடித்திருந்தார். படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் படம் பலரது கவனத்தினை ஈர்த்தது. இந்நிலையில் இவரது தயாரிப்பில் நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து உருவாகியுள்ள படம் தினசரி. படம் குறித்து தயாரிப்பாளரும் நடிகையுமான சிந்தியா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தினசரி படத்தின் போஸ்டர் வெளியானதும், இணையவாசிகள் பலர் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ள சிந்தியா குறித்து மிகவும் மோசமாக உருவக்கேலி செய்து விமர்சித்தனர். மேலும் சிலர் அவரை திருநங்கை எனவும் விமர்சித்தனர். சிலரோ தயாரிப்பாளர் என்றால் பணம் மட்டும் கொடுத்துவிட்டு கம்முனு இருக்க வேண்டியதுதானே? படத்தில் எதற்காக நடிக்கறீங்க? யார் பார்ப்பது என்றெல்லாம் மோசமாக கமெண்ட் செய்திருந்தனர்.

இப்படியான நிலையில் சிந்தியா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் பதில் அளித்துள்ளார். அதாவது, " நான் அமெரிக்காவில் ஐ.டி. துறையில் வேலை பார்க்கின்றேன். அதில் ஈட்டும் பணத்தை வைத்துதான் படம் தயாரிக்கின்றேன். என்னை பலர் மிகவும் மோசமாக விமர்சிக்கின்றார்கள். சிலர் மிகவும் மோசமாக விமர்சிக்கின்றனர். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு மிகவும் மன உளைச்சலைத்தான் அந்த விமர்சனங்கள் கொடுத்தது.
உருவக்கேலி: சிலர் என்னை திருநங்கை என விமர்சிக்கின்றார்கள். சிலர் பணம் இருந்தால் நடிப்பியா? யார் இதெல்லாம் பார்க்குறது? ஸ்ரீகாந்த்க்கு வந்த நிலைமையை பார்த்தீங்களா? என்றெல்லாம் விமர்சித்துள்ளார்கள். கமெண்ட் செக்ஷனைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதேநேரத்தில் யாரோ சிலர் எனக்கு ஆதரவாக கமெண்ட் செய்தது மட்டும் இல்லாமல், மோசமாக கமெண்ட் செய்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இளையராஜா: இந்தப் படத்தில் நான் நடிக்க முக்கிய காரணமே இளையராஜா சார்தான். அவர் இசை அமைத்தால் நான் நடிக்கின்றேன் எனக் கூறினேன். அதேபோல் அவர் இசை அமைக்க ஒப்புக்கொண்டார். நான் 2020ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். இங்குவந்துதான் தமிழ் கற்றுக் கொண்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் அதிகம் இளையராஜா சாரின் பாடல்களைத்தான் அதிகம் கேட்கின்றேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை இளையராஜா சாருடன் சந்தித்தேன். அப்போது எடுத்த புகைப்படங்கள்தான் இணையத்தில் வேகமாக பரவியது.
நடிப்பு: தினசரி படத்தில் இருந்து வெளியான பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் என்மீது மோசமான விமர்சனங்கள் விழும்போது எல்லாம், நடிகர் ஸ்ரீகாந்த் எனக்கு ஆதரவாக நிற்கின்றார். முதலில் எனக்கு நடிக்கும் எண்ணமே இல்லை. நான் முதலில் தயாரித்த படமான வர்ணாசிரம் படத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் பெண் கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என இயக்குநர் கூறியதால் நடித்தேன். அந்தப் படத்தைப் பார்த்த பலர், என்னை அடுத்த படத்தில் நீங்கள் கதாநாயகியாகவே நடிக்கலாம் எனக் கூறி உசுப்பேத்திவிட்டார்கள்.

விமர்சனம்: முதல் படத்தில் எனக்கு ஜோடி யாரும் இல்லை. இந்தப் படத்தில் எனக்கு ஸ்ரீகாந்த் ஜோடி என்பதால், நான் கதாநாயகியாக பார்க்கப்படுகின்றேன். எல்லோராலும் சினிமாவில் நடிக்க முடியாது. அதற்கு தலையில் எழுதி இருக்க வேண்டும். ஒரு தயாரிப்பாளராக நான் இப்போது வெற்றி பெற்றுவிட்டேன். நான் இன்னும் நிறைய படங்கள் எடுப்பேன். என்னை புறக்கணிக்கவே முடியாது. அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கவேண்டும். இன்றைக்கு பெரிய ஸ்டார்களாக உள்ளவர்கள் எல்லாம், தொடக்கத்தில் விமர்சனங்களைச் சந்தித்தவர்கள்தான். என்னை மோசமாக விமர்சித்தவர்களை வெச்சு செய்யப்போகின்றேன்" என பேசியுள்ளார். இவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











