டூரிஸ்ட் ஃபேமிலியை பாராட்டிய பிரமாண்ட இயக்குநர்.. நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன அபிஷன் ஜீவிந்த்
சென்னை: சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. 24 வயதான அபிஷன் ஜிவிந்த் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் இப்படம் கடந்த மே ஒன்றாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாராட்டியிருக்கிறார்.
சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான சசிகுமார் முதல் படத்திலேயே தான் ஒரு தரமான இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார். கண்டிப்பாக தொடர்ந்து இயக்குநராக பயணப்பட்டு கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குநராக அவர் வலம் வருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக திடீரென நடிகராக அவதாரம் எடுத்தார் சசிகுமார். அவர் நடிக்க ஆரம்பித்தபோது பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
பிஸியான நடிகர்: ஆனால் அவரோ அந்த விமர்சனங்களை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. டஹன் நடிக்கும் கதைகளை தேர்ந்தெடுப்பதில் முழு கவனத்தையும் செலுத்திய அவர் உடன்பிறப்பே, அயோத்தி, நந்தன், கருடன் ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். அவர் நடித்த அயொத்தி, நந்தன், கருடன் ஆகிய மூன்று படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. நந்தன் படத்தில் எல்லாம் சசியின் நடிப்பை பார்த்து பலரும் மிரண்டு போனார்கள் என்பதுதான் உண்மை.
டூரிஸ்ட் ஃபேமிலி: வரிசையாக மூன்று படங்களை ஹிட் கொடுத்து மினிமம் கியாரன்டி ஹீரோ என்ற பெயரை பெற்றுவிட்டார் அவர். சூழல் இப்படி இருக்க அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் அவருடன் சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். முதலில் வெளியான படத்தின் டீசரே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சக்கட்டமாக ரசிகர்களிடம் அதிகரிக்க வைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செம ரெஸ்பான்ஸ்: படமானது மே ஒன்றாம் தேதி வெளியானது. அன்றைய தினம்தான் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த ரெட்ரோ படமும் வெளியானது. எனவே ரெட்ரோ கொடுக்கும் போட்டியை இப்படம் சமாளித்துவிடுமா என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் ரெட்ரோவை டூரிஸ்ட் ஃபேமிலி அசால்ட்டாக ஓவர் டேக் செய்துவிட்டது. கோலிவுட்டில் நீண்ட காலம் கழித்து ஒரு ஃபீல் குட் திரைப்படத்தை பார்த்தோம் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்தார்கள்.
பிரபலங்களும் பாராட்டு: இப்படம் ரசிகர்களை மட்டுமின்றி திரைத்துறையில் இருக்கும் செலிபிரிட்டிகளையும் கவர்ந்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மற்றும் சசிகுமாரை பாராட்டி தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அளவில் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் ராஜமௌலியும் இந்தப் படத்தை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
ராஜமௌலியின் பாராட்டு: அவர் அந்த பதிவில், "டூரிஸ்ட் ஃபேமிலி என்ற அற்புதமான திரைப்படத்தை பார்த்தேன். மனதை தொடும் காட்சிகளும், நகைச்சுவையும் நிறைந்திருந்தது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை சுவாரஸ்யமாக இருந்தது. அபிஷன் ஜீவிந்த் சிறந்த எழுத்தையும், இயக்கத்தையும் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் நான் பார்த்த சிறந்த சினிமா" என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்த அபிஷன், "நன்றி ராஜமௌலி சார். உங்கள் ட்வீட் எங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ். இந்த நாளை இன்னும் அற்புதமாக மாற்றியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











