SSMB 29: சூப்பர் ஸ்டார்ஸ் கூட்டணி... 2000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டம்... மிரட்ட வரும் SSMB 29!
சென்னை: கடந்த சில வருடங்களாகவே பாலிவுட்டை விட தென்னிந்தியத் திரைப்படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டி வருகின்றன. பான் இந்தியா அளவில் பிரம்மாண்டம் காட்டி வரும் ராஜமெளலியின் படங்களுக்கு அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்நிலையில் மகேஷ் பாபுவுடன் ராஜமெளலி இணையும் படம் குறித்து சூப்பரான அப்டேட் கிடைத்துள்ளது.
2000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டம்
பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின்னர் இந்திய அளவில் பிரபலமானார் இயக்குநர் ராஜமெளலி. பாகுபலி முதல் பாகம், இரண்டாம் பாகம் என இரண்டுமே வசூலில் சக்கை போடு போட்டன. அதுமட்டும் இல்லாமல் பிரம்மாண்டமான மேக்கிங் மூலம் இந்தியத் திரையுலக ரசிகர்களையே வியப்பில் ஆழ்த்தினார் ராஜமெளலி. அதனைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்தது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான ஆர்.ஆர்.ஆர், நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்று காட்டியது. இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபுவுடன் இணைகிறார் ராஜமெளலி. டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, ராஜமெளலி கூட்டணியில் உருவாகும் படத்துக்காக ரசிகர்களிடம் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. இது ராஜமெளலியின் 29வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
SSMB 29 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க ராஜமெளலி திட்டமிட்டுள்ளார். மேலும் இது ராமாயணத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பிரம்மாண்டமான ஆக்ஷன் ஜானர் மூவியாக உருவாகவுள்ள SSMB 29 படப்பிடிப்பை அமேசான் காடுகளில் படமாக்கவும் ராஜமெளலி முடிவு செய்துவிட்டாராம். இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது. அதன் பின்னர் SSMB 29 படப்பிடிப்பை தொடங்க ராஜமெளலி - மகேஷ் பாபு டீம் முடிவு செய்துள்ளதாம். இதுவரை இந்திய சினிமாவிலேயே இப்படியொரு பிரம்மாண்டமான மூவி உருவானது இல்லை எனும் அளவிற்கு SSMB 29 இருக்குமாம். இதற்காக 2000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, முதல் பாகம் 900 கோடியிலும், இரண்டாம் பாகத்தை 1100 கோடி ரூபாய் பட்ஜெட்டிலும் எடுக்க ராஜமெளலி திட்டமிட்டுள்ளாராம். இதில் ராஜமெளலியின் சம்பளம் 100 கோடி எனவும், மகேஷ் பாபுவின் சம்பளம் 120 கோடிக்கும் அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பட்ஜெட்டே 2000 கோடி பட்ஜெட் என்றால், பாக்ஸ் ஆபிஸில் SSMB 29 புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சினிமாவில் SSMB 29 மூவி தான் 2000 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், SSMB 29 படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.


Click it and Unblock the Notifications











