இந்தா, ஜெயராம் வீட்டுல இருந்து வந்தாச்சு இன்னொரு நட்சத்திரம்!
திருவனந்தபுரம்: நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா, மாடலிங்கில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளார்.
பிரபல மலையாள ஹீரோ ஜெயராம். இவர், தமிழில் முறைமாமன், பெரிய இடத்து மாப்பிள்ளை, தெனாலி, பஞ்சதந்திரம், நைனா, நள தமயந்தி, துப்பாக்கி, உத்தம வில்லன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

மலையாள படங்களில் நடித்து வந்தாலும் சென்னை வளசரவாக்கத்தில்தான் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ஜெயராம். இவர் மனைவி பார்வதி, முன்னாள் ஹீரோயின். மலையாள படங்களில் நடித்து வந்தவர். தமிழில், பூவுக்குள் பூகம்பம் படத்தில் நடித்துள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு காளிதாஸ் என்ற மகனும் மாளவிகா என்ற மகளும் உள்ளனர்.
காளிதாஸ் தமிழில், மீன் குழம்பும் மண்பானையும் என்ற படத்தில் நடித்தார். படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அவர் நடித்த முதல்படமான ஒரு பக்க கதை இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இப்போது மலையாள படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் ஜெயராம் மகள் மாளவிகா, மாடலிங் துறைக்கு வருகிறார். இதுபற்றி மாளவிகா கூறும்போது, அப்பா- அம்மா மாதிரி எனக்கு நடிப்புல விருப்பம் இல்லை. காளிதாஸுக்கு சின்ன வயசுல இருந்தே நடிப்புல விருப்பம் இருந்தது. அதனால அவன் அதை கேரியரா தேர்ந்தெடுத்தான். எனக்கு ஃபேஷன், விளையாட்டு, டிசைனிங் இதுலதான் ஆசை. மாடலிங் பண்ண விருப்பம் இருக்கு. கண்டிப்பாக மாடலிங் பண்ணுவேன் என்கிறார் புன்னகைத்தபடி .
நடிகர் ஜெயராம் மனைவி பார்வதியிடம் கேட்டால், 'மாளவிகாவுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தது. அவ மறுத்துட்டா. ஆனா, ஃபேஷன்ல அவளுக்கு ரொம்ப ஆர்வம். அதுல பயங்கர அப்டேட்டா இருப்பா. லேட்டஸ்டான ஃபேஷன் விஷயங்களை கேட்டா, அடுத்த நிமிஷமே கொட்டுவா. பிள்ளைகளோட ஆசைய நிறைவேற்றணுங்கறது எங்க கடமை. அதை நாங்க செய்வோம் என்கிறார்.
மாடலிங்கில் இருந்துதான் பெரும்பாலான நடிகைகள் வந்திருக்கிறார்கள் சினிமாவுக்கு. மாளவிகா முதலில் மாடலிங்கில் என்ட்ரி கொடுத்துவிட்டு பிறகு சினிமாவுக்கு வருவார் என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











