‘ஸ்டார்’ வெற்றி கொடுத்த உத்வேகம்.. ரசிகர்களால் கொண்டாடப்படும் கவின்... காரணம் என்னத் தெரியுமா?
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார் கவின். அந்த சீரியலில் முறுக்கு மீசை, சட்டை பட்டனை கழட்டிவிட்டு கிராமத்து கெட்டப்பில் நடித்து இளசுகளின் மனதில் கனவு கண்ணமாக மாறினார் கவின். அந்த சீரியலை பல டீன் ஏஜ் பெண்கள் பார்ப்பதற்கு காரணமே கவின் என்று சொல்லலாம். அது தற்போது வரை தொடர்ந்து, இப்போதும் இணையத்தில் கொண்டாடப்படும் நடிகராக இருககிறார்.
சீரியல் நடித்துக்கொண்டிருந்த கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் லாஸ்லியாவை இவர் காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கள் எழுந்த போது, பல இளம் பெண்களின் இதயத்தில் குண்டுவைத்தது போல, இணையத்தில் புலம்பி தள்ளினார்கள். பல இளம் பெண்களின் சாபமே என்னமோ அது வெறும் கிசுகிசுவோடு முடிந்து போனது.

நடிகர் கவின்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணபெட்டியோடு வெளியே வந்த கவின், சத்ரியன் என்ற படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் தனது தடத்தை பதித்தார். இதையடுத்து நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படம் மூலம் ஹீரோவாக மாறினார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின் இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் லிப்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் ஐடி ஊழியராக நடித்திருந்தார். தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியான போதும் இந்த படத்திற்கு பாராட்டுகள் குவிந்தன.
டாடா: லிப்ட் படத்தை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. கல்லூரி மாணவனாக, காதலனாக, அப்பா என மூன்று விதமான கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் பெற்றோருக்கு மட்டுமில்லாமல் கல்லூரி மாணவர்களுக்கும் பிடித்து இருந்ததால், தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வந்து படம் பார்த்து சென்றனர்.
காதல் திருமணம்: இரண்டு வெற்றிப்படத்தை கொடுத்த கவின், தனது நீண்ட நாள் பள்ளித் தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கவின் மோனிகாவின் திருமணம் ஆடம்பரமே இல்லாமல் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன், நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடன இயக்குனர் சதீஷ், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, யூடியூபர் இர்பான் கவினின் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ரசிகர்களால் கொண்டாடப்படும் கவின்: தற்போது தமிழ் சினிமாவில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்து இருக்கும் கவினின் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் வெளியாகி உள்ளது. 10ந் தேதி வெளியான இந்த படத்தில், சினிமாவில் ஹீரோவாக துடிக்கும் ஒரு நடிகரின் வலியை அப்பட்டமாக காட்டி உள்ளார் கவின். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள கவினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஸ்டார் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில் படம் பார்க்க சென்ற கவினை சுற்றி வளைந்த ரசிகர்கள் அவருடன் செல்பி கொடுத்துக்கொண்டனர்.
ஒரு வளர்ந்த பெரிய நடிகருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் இரண்டு வெற்றிப்படத்தை கொடுத்த கவினுக்கு கிடைத்து இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இவரின் எதார்த்தமான நடிப்பு, அலட்டிக்கொள்ளாத எளிமையான குணம், அதே போல இன்றைய இளம் ரசிகர்களின் பல்சை நன்றாக புரிந்து கொண்ட கவின், அதற்கு ஏற்றார் போல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதால், இன்று சோஷியல் மீடியாவில் அனைவரும் கொண்டாடப்படும் நடிகராக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











