இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது.. ஸ்டார் இயக்குநரின் உருக்கமான அறிக்கை!
சென்னை: பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியானத் திரைப்படம் ஸ்டார். நடிகர் கவினின் அசத்தலான நடிப்பில் மக்கள் மத்தியில் படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், படத்தின் இயக்குநர் இளன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் 'பியார் பிரேமா காதல்’ காதலை அடிப்படையாகக் கொண்டு உருவான இத்திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகம் ஆனார் இளன். இந்த படம் இந்த காலத்து இளசுகளை கவரும் வகையில் இருந்ததால், படம் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இந்த படத்தைத் தொடர்ந்து, இளன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஸ்டார்.

மகத்தான வசூல்: பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்த இந்த படத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் வெள்ளிகிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் முதல் நாளில், 2.8 கோடி வசூல் செய்த நிலையில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் 4 கோடியை வசூலித்துள்ளது. படத்தின் மொத்த வசூல் 10.80 கோடியாக உள்ளது.
இயக்குநர் அறிக்கை: இந்நிலையில் ஸ்டார் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால் மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கும் இயக்குநர் இளன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதல் நாள் காட்சியில், முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து, உங்கள கட்டி புடிச்சுக்கலாமா? அந்த இரு கணம் அன்பு மட்டுமே வெளிப்பட்டது. ஓர் கணவனும் மனைவியும், திரையரங்கை விட்டு விலகவே இல்லை. தேம்பி தேம்பி அழுதாள், நானும் அழுதேன். அந்த கண்ணீரும் அன்பே. திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண், கன்னத்தை பிடித்து சுத்திப்போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது. பல இடங்களில் கைதட்டலும், கரகோஷமும் "லவ் யூ" என்று சொல்வதாகவே தோன்றியது.
இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது: இறுதிக்காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றியுள்ளது. ரோலிங் கிரெடிட்ஸ் போட்டவுடன் எழுந்து செல்வதே வழக்கம். ஆனால், நான் கண்டதோ காதலியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத காதலர்களைதான். ஒரு சில [ பல ] விமர்சனங்கள், நான் ஒரு கலைஞனாய் மெருகேற உதவுகிறது. நம்பிக்கைக்கு நன்றி. கூட்டம் அலைமோதுகிறது. பகலிலும், மதியத்திலும், இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது. என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











