Star Movie Mistakes: பல இடங்களில் கோட்டை விட்ட ஸ்டார்.. இளன் இதையெல்லாம் சரி பண்ணியிருக்கலாம்!
சென்னை: பியார் பிரேமா காதல் படத்தில் லிவிங் டுகெதர் விஷயத்தையும் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளையும் வைத்து படமாக்கிய இளன் ஸ்டார் படத்தில் 2 காதல்கள் மற்றும் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பான காட்சிகளை அதிகம் வைத்தாலும் எதையுமே ஆழமாக சொல்லாதது தான் படத்தின் மிகப்பெரிய குறையாக மாறியுள்ளது.
சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆர்வத்துடன் இருக்கும் கவின் அதற்காக எந்தவொரு முயற்சியும் செய்தது போல படத்தின் திரைக்கதையை இயக்குநர் உருவாக்காமல் விட்டு விட்டார்.

சினிமாவுக்கு பின்னால் இருக்கும் குடும்ப கஷ்டத்தை பல இடங்களில் வலுக்கட்டாயமாக திணித்தது போன்று தான் இருந்தது. அம்மா தனது தாலி சங்கிலியை கழட்டி வீசும் காட்சிகள் எல்லாம் அழுத்தமாக சொல்லப்படவில்லை. பல நிறைகளும் அதே அளவுக்கு பல குறைகளும் உள்ள படமாக கவின் நடித்துள்ள ஸ்டார் படம் வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தை மக்கள் கொண்டாட ஆரம்பித்தால் இது பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், கிராஃப்ட்டாக ஸ்டார் படம் கோட்டை விட்ட சில பகுதிகளை மட்டும் இங்கே லேசாக அலசுவோம்.
இரண்டு ஹீரோயின்களும் சுமார்: கவின் அழகுக்கு ஏற்றவாறு ப்ரீத்தி முகுந்தனும் அதிதி போஹங்கரும் இல்லாததே மிகப்பெரிய குறையாக உள்ளது. அந்த 2 ஹீரோயின்களை விட சில நிமிட பாட்டுக்கு மெலோடியாக வரும் கவின் கலக்கலாக உள்ளார். 2வது ஹீரோயினாக அதிதி போஹங்கர் வரும் காட்சிகள் மெளனம் பேசியதே கிளைமேக்ஸில் லைலா வருவதை ஞாபகப்படுத்துகிறது. அவர் மழையில் கவினுடன் பேசும் காட்சிகள் அப்படியே முகவரி படத்தில் ஜோதிகா - அஜித் கான்வர்சேஷனை தான் நினைவுபடுத்துகிறது. டாடா படத்தில் வொர்க்கவுட் ஆன அளவுக்கு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. லவ் போர்ஷன்களும் மெளன ராகம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களை நினைவு படுத்துகின்றன.
பல படங்களில் இருந்து இன்ஸ்பிரேஷன்: ஸ்டார் படத்தின் மூலக் கதை முழுவதும் முகவரி படத்தில் இருந்து இன்ஸ்பயர் செய்யப்பட்டு இருப்பது தெளிவாகவே தெரிகிறது. மேலும், கல்லூரி போர்ஷனுக்கு வாரணம் ஆயிரம் சூர்யா இன்ஸ்பிரேஷன், சாதிக்க முடியாமல் கஷ்டப்படும் இடங்கள், மனைவி வேலைக்குப் போய் கணவரை பார்த்துக் கொள்ளும் காட்சிகளில் மயக்கம் என்ன என தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெளியான பல படங்களின் புதிய கலவையாகவே இந்த ஸ்டார் உருவாகியிருக்கிறது. கவினின் நடிப்பை தாண்டி லால் நடிப்பு மட்டுமே சொல்லிக் கொள்ளும் படி உள்ளது. மற்றவர்களின் நடிப்பு நண்பராக வருபவரின் போர்ஷன் எல்லாம் வீக்காகவே உள்ளன. முகவரி படத்தில் கேசட் கடை வைத்திருக்கும் மணிவண்ணன் கதாபாத்திரம் கூட அப்படியே நினைவுக்கு வருவது போல ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. இதையெல்லாம் கொஞ்சம் சரி செய்திருந்தால், இந்த ஸ்டார் சூப்பர் ஸ்டாராகவே மாறியிருக்கும். ஆனாலும், ஒரு ரைசிங் ஸ்டாராகவே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











