Star Box Office: கவினுக்கு முதல் நாளே செம ஓபனிங்.. ஆனால், அரண்மனை 4 வசூலை நெருங்க முடியாத ஸ்டார்!
சென்னை: ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவே கவின் மாறியுள்ளார். விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன் வரிசையில் அடுத்து கவினும் உச்ச நட்சத்திரமாக வலம் வருவார் என்றே தெரிகிறது.
பெரும்பாலும் நடிகராக வேண்டும் என வந்து விட்டு தனக்கு நடிக்க தெரியாது என்றும் ரிஸ்க்கான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் பல நடிகர்கள் பவுடர் மூஞ்சிகளாகவே வலம் வரும் நிலையில், கவின் அதை 4வது படத்திலேயே பிரேக் செய்துள்ளார்.

இளன் தனது தந்தைக்கான சமர்ப்பணமாக எடுத்துள்ள இந்த ஸ்டார் படத்தை முதல் நாள் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துள்ளனர். அதன் விளைவாக கவினுக்கு முதல் நாளே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
தியேட்டரில் கலங்கி நின்ற கவின்: ஸ்டார் படத்தை பார்க்க நேற்று சென்னையில் பல்வேறு தியேட்டர்களுக்கு கவின் விசிட் அடித்து வந்தார். வெற்றி தியேட்டரில் ரசிகர்களின் ரெஸ்பான்ஸை பார்க்க சுவற்றின் அருகே சாய்ந்து நின்று கொண்டு கவின் படத்தை பார்த்து பின்னர் ரசிகர்கள் முன் தோன்ற அனைவரும் கவினை “நீ நடிகன் டா” என பாராட்டி தள்ளிவிட்டனர்.
இளனுக்கு 2வது ஹிட்: பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளனுக்கு இயக்குநராக இது இரண்டாவது வெற்றி. ஸ்டில்ஸ் பாண்டியனின் மகனான இளன் இயக்குநராக உருவாகி தனது தந்தையை கெளரவப்படுத்தும் விதமாக ஒரு படத்தை இயக்கி வெற்றி கண்டிருப்பது இளனின் தந்தையை பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும், ஸ்டார் படத்தில் ஹீரோயின் அதித் போஹங்கரின் அப்பாவாக ஸ்டில்ஸ் பாண்டியன் நடித்த காட்சிகள் வரும் போது தியேட்டரே கொண்டாட ஆரம்பித்து விட்டது.
டிக்கெட் முன்பதிவு: சுமார் 1.5 கோடி வரை கவின் நடித்துள்ள ஸ்டார் படத்துக்கு டிக்கெட் புக்கிங் நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவினுக்கு இந்த படம் நல்ல ஓபனிங் படமாக அமையும் என்றும் அதற்கு காரணம் படத்தின் டிரைலர் தான் என்றும் கருத்துக்கள் வெளியான நிலையில், முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

முதல் நாள் வசூல்: டிக்கெட் முன் பதிவிலேயே 1.5 கோடி ரூபாய் வசூலை கவினின் ஸ்டார் படம் பெற்ற நிலையில், முதல் நாள் வசூல் 2.7 கோடி ரூபாய் அளவுக்கு வந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளில் அரண்மனை படத்துக்கு வசூல் அதிகரித்தது போல ஸ்டார் படத்துக்கும் வசூல் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
அரண்மனையை முந்தவில்லை: இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படமாக கவினின் ஸ்டார் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரண்மனை 4 முதல் நாளில் 4 கோடி வசூல் செய்து ஒரே வாரத்தில் 50 கோடி வசூலை கடந்த நிலையில், கவினின் ஸ்டார் திரைப்படம் முதல் நாளில் 3 கோடிக்கும் குறைவான வசூலையே அள்ளியிருக்கிறது. டாடா படத்தை போல இதுவும் 50 கோடி அளவுக்கு வசூலை ஈட்டுமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











