மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு சிலை திறப்பு... உருக்கமாக பேசி கண்கலங்கிய விஜய் சேதுபதி!
சென்னை: மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் சிலை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி உருக்கமாக பேசி கண்கலங்கியது பலரையும் நெகிழச் செய்தது.
தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குநர் எஸ்பி ஜனநாதன். 2003 ஆம் ஆண்டு வெளியான இயற்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக என்ட்ரி கொடுத்தார்.
முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச் சென்றார். அடுத்து ஜீவா, நயன்தாரா, பசுபதி ஆகியோரின் நடிப்பில் ஈ படத்தை இயக்கினார்.

எஸ்பி ஜனநாதன் படங்கள்
அதன்பிறகு ஜெயம் ரவி நடிப்பில் பேராண்மை படத்தை இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து புறம்போக்கு என்கிற பொதுவுடமை, பூலோகம் ஆகிய படங்களை இயக்கினார். கடைசியாக லாபம் படத்தை இயக்கினார் எஸ்பி ஜனநாதன். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

சந்தேகமடைந்த உதவியாளர்கள்
இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று கொண்டிருந்தது. எடிட்டிங் பணியில் இருந்து மதிய இடைவேளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார் எஸ்பி ஜனநாதன். பின்னர் நீண்ட நேரமாகியும் ஸ்டுடியோவுக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது உதவியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

மூளைச்சாவு ஏற்பட்டு...
அப்போது சுயநினைவின்றி மயங்கிய நிலையில் கிடந்தார் எஸ்பி ஜனநாதன். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்பி ஜனநாதன். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து 3 நாட்கள் தீவிர சிகிச்சையளித்தும் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் கடந்த மார்ச் மாதம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

மருத்துவ செலவுகள்
எஸ்பி ஜனநாதனுக்கு உடல் நலக்குறைவு என்றதுமே மருத்துவமனைக்கு சென்ற விஜய் சேதுபதி கண்கள் கலங்க இயக்குநர் எஸ்பி ஜனநாதனை தட்டி எழுப்பினார். மேலும் அவரது மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்றார் விஜய் சேதுபதி.

சிலை திறப்பு விழா
இருப்பினும் இயக்குநர் எஸ்பி ஜனநாதனை காப்பாற்ற முடியாமல் போனது. இந்நிலையில் இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நடைபெற்ற இந்த சிலை திறப்பு விழாவில் சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, அவருடைய கடைசி படத்தில் எஸ்பி ஜனநாதனுடன் இணைந்து பணியாற்றியது தனது வாழ்க்கையின் பேரின்பம் என்று தெரிவித்தார்.

எமோஷனல் பேச்சு
எஸ்.பி.ஜனநாதனுடன் அதிகம் இருக்காவிட்டாலும், இயக்குனருடன் இணைந்து 'புறம்போக்கு' மற்றும் 'லாபம்' ஆகிய படங்களில் பணியாற்றிய போது அவர் கூறிய வார்த்தைகள் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகவும் அவர் கூறினார். கண்கள் கலங்க எமோஷனலாக பேசினார். அவரது பேச்சு பலரையும் நெகிழ செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











