Na.Muthukumar - நா.முத்துக்குமார் இந்த வரிகளை எழுதியதற்கு பின் இப்படி ஒரு கதை இருக்கிறது..!
சென்னை: Na.Muthukumar Memorial Day (நா. முத்துக்குமார் நினைவு தினம்) பாடலாசிரியர், கவிஞர் நா.முத்துக்குமாரின் ஏழாவது ஆண்டு நினைவு தினம் இன்று
ஒரு படைப்பாளி தனது படைப்பை எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமாக சொல்கிறாரோ அதைவிட முக்கியம் அதை எளிமையாக சொல்ல வேண்டும். அந்த எளிமை அர்த்தமானதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த படைப்பு எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி பல காலம் ரசிகர்கள் மனதில் தங்கியிருக்கும். அந்த வித்தையை நா.முத்துக்குமார் தன்னுடைய இறுதிக்காலம்வரை செய்துகொண்டே இருந்தார். அவரது எழுத்தை பார்க்கும்போது அட நம்ம உணர்வை ரொம்ப எளிமையா சொல்லிட்டாரே என்ற கனெக்ட் எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் அப்படி எளிமையாக எழுதுவது நிச்சயம் எளிதல்ல. அதற்கு ஒரு ஜென் நிலையும், கூடு விட்டு கூடு பாயும் தன்மையும் வேண்டும். அது நா. முத்துக்குமாருக்கு இருந்தது.

பார்ப்பதெல்லாம் பாடல்தான்: சீமானால் அறிமுகப்படுத்தப்பட்ட நா. முத்துக்குமார் செல்வராகவனால் அடையாளப்பட்டார். செல்வராகவனின் காதல் கொண்டேனில் ஆரம்பித்த அவரது பயணம் அவர் இறந்த பிறகும் நீண்டுகொண்டே செல்கிறது. அவரது வரிகளிலேயே சொல்ல வேண்டுமென்றால்
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே'.
ஆம் அவரது பயணம் இப்போதும் நீள்கிறது எப்போதும் நீண்டுகொண்டே இருக்கும். எல்லோரும் உவமையை தொலைவிலிருந்து எடுத்துக்கொண்டிருக்க முத்துக்குமார் மட்டும்தான் டீ கடைகளிலிருந்தும், சக மனிதர்களின் வாழ்க்கையிலிருந்தும் எடுத்தார். அதனால் அவர் பார்வையில் பட்ட விஷயங்கள் எல்லாம் பாடல்களாகின.
முத்துக்குமாரிடம் இன்னொரு ஸ்பெஷல்: பார்வையில் பட்ட விஷயங்களை பாடல்களாக மாற்றுவது ஒரு கலை என்றால் அந்த விஷயங்களை பலவந்தம் செய்து பாடலுக்குள் திணிக்காமல் ஒரு குழந்தைக்கு தாய் பால் ஊட்டுவது போல் லாவகமாக பாடலுக்குள் ஊட்டி பெரும் உணர்வை கடத்தக்கூடியவர். அதற்கு உதாரணமாக பல பாடல்களில் இருக்கும் வரிகளை சொல்லலாம். நா.முத்துக்குமாரின் எளிமையான வரிகளுக்கு பின்னால் வலிமையான கதைகள் பல இருக்கின்றன. அப்படி சில வரிகளையும், அதற்கு பின்னால் இருக்கும் கதைகளையும் இதில் காணலாம்.
கிளை தொடங்கும் நடனம் முடிவதில்லையே: முத்துக்குமாருக்கு எப்போதும் இலைகள் மீதும், கிளைகள் மீதும் தீராத காதல் உண்டு. மழை நின்றபோதிலும் மரக்கிளைகள் தூறுதே, தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இலை படகு ஆனதே, மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார் இலைகள் விழுந்தால் சருகாகும் என்று தான் எழுதிய பாடல்களில் பெரும்பாலும் இலை, கிளையை வைத்துவிடக்கூடியவர் அவர்.
மதராசப்பட்டினம் பட பாடல்கள் எழுதுவதற்காக அதன் இயக்குநர் ஏ.எல்.விஜய், நா. முத்துக்குமார் உள்ளிட்டோர் சிங்கப்பூர் சென்றிருக்கின்றனர். ஒரு நெடுஞ்சாலையில் கார் பறந்துகொண்டிருந்திருக்கிறது. அப்போது வழக்கம்போல் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்த நா.முத்துக்குமார் ஒரு காட்சியை பார்க்கிறார்.
ஒரு மரத்தின் கிளையில் இருந்து பறவை பறந்து சென்ற பிறகும் கிளை ஆடிக்கொண்டிருக்கிறது. அதனை கண்ட அவர் உடனடியாக எழுதினார் 'காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் கிளை தொடங்கும் நடனம் முடிவதில்லையே'. பறவை பறந்த பிறகு கிளையின் ஆட்டத்தை பல காலமாக நாம் கவனித்திருப்போம். ஆனால் முத்துக்குமாருக்கு மட்டும்தான் அந்த ஆட்டம் நடனமாகவும், பறவை காதலியாகவும் தெரிந்தது. அவைகளை மதராசப்பட்டினம் பூக்கள் பூக்கும் தருணம் பாடலின் மெட்டுக்குள் வைக்கவும் முடிந்தது. இந்த வரியை ஜெயமோகன் ரொம்பவே புகழ்ந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
காட்டில் காயும் நிலவு: முத்துக்குமார் பயணங்களின் காதலன். பயணமும், புத்தகமும்தான் ஒருவனது மூன்றாவது கண்ணை நம்பும் என்பதில் இறுதிவரை நம்பிக்கையோடு இருந்தவர். அந்த நம்பிக்கையின்படி செயல்படவும் செய்தவர். தோன்றும் இடங்களுக்கு செல்லும் பழக்கம் உடைய அவர் ஒரு முன்னிரவில் வனத்துக்குள் சென்றுகொண்டிருக்கும்போது நிலவை கவனித்தார். இந்த இரவில் வனத்துக்குள் நிலவுதானே வெளிச்சம் கொடுக்கிறது. ஆனால் இதை யாருமே கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்களே என்ற எண்ணம் எழுந்து அப்போதே தன்னுடைய ஞாபகத்தில் எழுதி வைத்துக்கொண்டார், 'காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை'.
பிறகு அதனை 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்ற கண் பேசும் வார்த்தைகள் பாடலில் பயன்படுத்தி ஒட்டுமொத்த ஒருதலை காதலர்களையும் தன்னுடைய அந்த வரியால் கட்டிப்போட்டார். முக்கியமாக அந்தப் பாடலின் அனைத்து வரிகளுமே சிறப்பாக இருந்தாலும் இந்த வரி அந்தப் பாட்டுக்கு மேலும் வெளிச்சத்தை கொடுத்தது.
நக்கல் புடிச்ச நா. முத்துக்குமார்: ஒரு கவிஞனுக்கு ஞாபகத்தின் அடுக்கு ரொம்பவே முக்கியம். சின்ன வயதில் பார்த்ததிலிருந்து, இப்போது பார்ப்பதுவரை தன்னுடைய நினைவு அடுக்கில் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அதுவும் நா. முத்துக்குமாருக்கு ஞாபக சக்தி ரொம்பவே அதிகம் என்று அவருடன் நெருங்கி பழகியவர்கள் கூறியதுண்டு.
தன்னுடைய சிறு வயதில் தன் பக்கத்து வீட்டு அக்கா வேற்று சாதிக்காரரை தீவிரமாக காதலித்திருக்கிறார். அந்தக் காதலுக்கு நா. முத்துக்குமார்தான் தூதுவன். அக்கா கொடுக்கும் கடிதத்தை அந்த அண்ணனிடமும், அந்த அண்ணன் கொடுக்கும் கடிதத்தை அக்காவிடமும் கொடுப்பது இவரது வாடிக்கை. ஒருமுறை அந்த அக்கா தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து முத்துக்குமாரிடம், 'தம்பி மார்க்கெட்டுக்கு போயி மீன் வாங்கிட்டு வரியா. அவருக்கு மீனுனா ரொம்ப பிடிக்கும். சமைக்க கத்துக்கணும்' என கேட்க முத்துக்குமாரும் வாங்கி கொடுத்திருக்கிறார். அந்தப் பெண்ணும் சமைக்க பழகியிருக்கிறார். ஆனால் அந்த காதல் கடைசியில் கைகூடவில்லை என்பது வேறு கதை.
இந்த சம்பவத்தை பல காலம் நினைவின் அடுக்கில் பத்திரப்படுத்தி வைத்திருந்த முத்துக்குமார் ரன் படத்தில் பாடல் எழுதும்போது, 'ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ'என்று எழுதி அதகளம் செய்தார். தேரடி வீதியில் பாடலை பற்றி இப்போது பேசினாலும் பலரும் அந்த வரியை குறிப்பிட்டு நக்கல் புடிச்ச ஆளுய்யா நா.முத்துக்குமார். ஒரு லவ் மேரேஜ்க்கு எங்கேர்ந்து உவமையை எடுத்து வந்திருக்கிறார் பாருங்க என பலர் சொல்வதை கேட்க முடியும்.
மகனுக்காக எழுதிய பாடல்: இயக்குநர் ராம் முத்துக்குமாரை பற்றி ஒரு மேடையில் இப்படி குறிப்பிடுவார். 'அவன் அன்பான கணவன், நடுத்தர குடும்பஸ்தன், வெறிப்பிடித்த அப்பா'. ஆம் தன்னுடைய மகன் ஆதவன் முத்துக்குமார் மீதும், மகள் மகா லட்சுமி மீதும் ரொம்பவே பாசம் வைத்திருந்தவர். ஆதவன் பிறந்து சில வருடங்கள் கழித்தே மகா லட்சுமி பிறந்தார். அதன் காரணமாக அந்த இடைப்பட்ட காலத்தில் ஆதவன் மீதான அன்பு முத்துக்குமாருக்கு அதிகமாகவே இருந்தது.
ஆதவனுக்கு 2 வயது இருக்கும்போது எப்படியாவது தன்னுடைய மகனின் பெயரை ஒரு பாடலிலாவது வைத்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார் நா. முத்துக்குமார் . அந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவர் இப்படி எழுதினார். 'அனுபவிடா என்றே என்றேதான் ஆண்டவனும் தந்தான்.. எடுத்துக்கடா இன்றே இன்றே என்று ஆதவனும் வந்தான்' என ஆதவன் படத்தில் இடம்பெற்ற டமக்கு டமக்கு டம டம்மா பாடலின் தன்னுடைய மகன் பிரவேசத்தை அட்டகாசமாக பாடலுக்குள் வைத்து பொதுவெளிக்கு சொன்னார்.
அதேபோல் தன்னுடைய பெயரை இன்னொரு பாடலில் வரும்படி எழுத முடியுமா என விளையாட்டாக ஆதவன் கேட்க, 'பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனை பார்த்ததாரும் இல்லையே' என அதிலும் யாருக்கும் தெரியாதபடி வைத்துவிட்டு ஆச்சரியப்படுத்தியவர் முத்துக்குமார். அவர் எழுதிய பாடல்களின் எளிமையான வரிகளுக்கு பின்னால் இப்படி பல கதைகள் இருக்கின்றன.
அந்தக் கதைகள் இன்னமும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். ஏனெனில் முத்துக்குமார் விட்டு சென்றது சாதாரண வெற்றிடமில்லை. யார் வேண்டுமானாலும் அந்த இடத்தை வந்து நிரப்பிக்கொள்வதற்கு. அவர் விட்டு சென்றது ஒரு எளிமையின் வெற்றிடம். அந்த எளிமை அவரைத் தவிர்த்து இன்றுவரை யாருக்கும் இல்லை. அந்த எளிமை கவிஞரின் ஏழாவது ஆண்டு நினைவு தினம் இன்று.. அவரை பெருமையோடும், உணர்வோடும், எளிமையோடும் நினைவுகூர்கிறது தமிழ் ஃபில்மிபீட்..


Click it and Unblock the Notifications











