கருடன் படத்தின் கதை சூரி கொடுத்த ஐடியா.. சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குநர் துரை செந்தில்குமார்
சென்னை: நடிகர் சூரி இப்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் அடுத்ததாக கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, கருடன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்தச் சூழலில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருடன் படம் நாளை வெளியாகவிருக்கும் சூழலில் துரை செந்தில்குமார் பேசியிருக்கும் விஷயம் கவனம் ஈர்த்திருக்கிறது.
சூரி கோலிவுட்டின் முன்னணி காமெடியன். தொடர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்துவந்த அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பை ஹீரோ ரோலில் வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார். மேலும் சண்டை காட்சிகளிலும் ரிஸ்க்கையும் எடுத்திருந்தார் சூரி. அது அவருக்கு பெரும் பாராட்டை பெற்றுக்கொடுத்தது. விடுதலை படத்தில் அவரது நடிப்பை பார்த்த பலரும் சூரி இனி ஹீரோவாக தொடரலாம் என்று நம்பிக்கை வார்த்தை அளித்தனர்.

கருடன்: பெரும்பாலானோரின் கருத்துப்படியே சூரி இப்போது ஹீரோவாகவே நடித்துவருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. மேலும் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார் சூரி. இந்தப் படங்கள் தவிர்த்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் சசிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் நாளை வெளியாகவிருக்கிறது.
துரை செந்தில்குமார் பேட்டி: இந்நிலையில் படத்தின் ரிலீஸையொட்டி ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. அந்தவகையில் துரை செந்தில்குமார் அளித்த பேட்டி ஒன்றில், "அதிகாரம் என்ற கதையை வெற்றிமாறன் என்னிடம் கூறினார். நான் அந்தப் படத்துக்கான திரைக்கதை வேலைகளில் இப்போது இருக்கிறேன். ஆனால் கருடன் படத்தின் கதை வெற்றிமாறனின் கதை இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்.
சூரியின் ஐடியா: இந்தப் படத்தின் கதைக்கான ஐடியா சூரி சொன்னதுதான். அந்த ஐடியாவை நானும் என்னுடைய உதவி இயக்குநர்களும் சேர்ந்து எழுதினோம். படத்தின் தயாரிப்பாளருக்கும் இந்தக் கதை பிடித்திர்நுதது. ஒரு ப்ரோமோஷனுக்காக இந்தப் படத்தின் கதையாசிரியர் பெயரில் வெற்றிமாறனின் பெயரை பயன்படுத்திக்கொள்லலாம் என்று முடிவு செய்தோம். வெற்றிமாறனும் அதற்கு சம்மதித்தார். ஒரு சில ஆலோசனைகளை மட்டுமே அவர் வழங்கியிருக்கிறார். ஆனால் கதை அவருடையது இல்லை" என்றார்.
ரசிகர்கள் ஆச்சரியம்: துரை செந்தில் குமாரின் இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் சூரி கதையின் ஐடியாவையே சொல்ல ஆரம்பித்துவிட்டாரா என்று ஆச்சரியப்படும் அவர்கள், அவர் பட்ட கஷ்டத்துக்கு இப்போதுதான் புயல் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறார் என்று வாழ்த்து தெரிவித்து கமெண்ட்ஸ்களையும் தெரிவித்துவருகிறார். துரை செந்தில்குமார் ஏற்கனவே கொடி, எதிர்நீச்சல், காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இவர் வெற்றிமாறனிடமும், பாலுமகேந்திராவிடமும் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











