STR 48: "ரஜினிக்கு சொன்ன கதை தான்... சிம்புவுக்காக மாற்ற அவசியம் இல்ல..” தேசிங் பெரியசாமி ஓபன்!
சென்னை: சிம்பு தற்போது தனது 48வது படத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார்.
கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்துக்கு STR 48 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

STR 48 படத்தின் கதை ரஜினிக்காக சொல்லப்பட்டது என செய்திகள் வெளியாகியிருந்தன.
அதுகுறித்து மனம் திறந்துள்ள தேசிங் பெரியசாமி, STR 48 ரஜினிக்காக எழுதியது தான் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
STR 48 ரஜினிக்கு சொன்ன கதை தான்
கோலிவுட்டின் இளம் மாஸ் ஹீரோவான சிம்பு, தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்த அவர், தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் கேங்ஸ்டராக நடித்து கெத்து காட்டியிருந்தார். இதனால், சிம்புவின் அடுத்த படம் என்ன என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இறுதியாக சிம்புவின் 48வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்குவது கன்ஃபார்ம் ஆனது. அதன்படி கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு - தேசிங் பெரியசாமி கூட்டணி இணைகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் தேசிங் பெரியசாமி. துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்ஷன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பால், STR 48க்கும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதன்பின்னர் அந்தக் கூட்டணி உறுதியாகவில்லை என்பதால், சிம்புவுடன் இணைந்தார் தேசிங் பெரியசாமி. அதேநேரம், ரஜினிக்கு சொன்ன அதே கதை தான் சிம்புவின் STR 48 படம் என கோலிவுட்டே பரபரப்பானது.
ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் சிம்பு, அதுவும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு என்பது இன்னும் ஹைப் கூடியது. ஆனால், அதுபற்றி அபிஸியலாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது STR 48 கதை குறித்து இயக்குநர் தேசிங் பெரியசாமியே மனம் திறந்துள்ளார். அதாவது STR 48 கதை ஏற்கனவே ரஜினி சாருக்கு சொன்னது தான். அதுதான் இப்போது STR 48 படமாக உருவாகவுள்ளது என்றுள்ளார்.
அதேபோல், ரஜினிக்குப் பதிலாக சிம்பு நடித்தாலும், கதையில் பெரிதாக எந்த மாற்றங்களும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார். ரஜினியும் சிம்புவும் ஒரே மாதிரியான மாஸ் கொண்டவர்கள் தான். அதனால், சிம்புவுக்காக எந்த மாற்றமும் இல்லாமல் STR 48 அப்படியே உருவாகும் எனக் மனம் திறந்துள்ளார் இயக்குநர் தேசிங் பெரியசாமி.


Click it and Unblock the Notifications











