இணையத்தில் ட்ரெண்டாகும் Come Back Manmadhan! இரண்டாம் பாகத்துக்கு தூசி தட்டுவாரா சிம்பு!
சென்னை: தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து நடித்தாலும் நடிக்காவிட்டாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அங்கீகாரத்தினை மதிப்பினைக் கொண்டுள்ள நடிகர்களில் சிம்புவுக்கு எப்போதும் உச்சத்தில் இடம் உள்ளது. தனது குழந்தைப் பருவத்தில் இருந்து நடித்துவரும் சிம்பு சினிமாவின் அனைத்து துறைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த நடிகர்களில் ஒருவர்.
இவரது படங்களில் பல படங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. நடிப்பில் சிம்பு இளைஞர்களைச் சுண்டி இழுக்கின்றார் என்றால், இவரது படங்கள் என்றால் தீயாய் இசை அமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா பாடல்களுக்கு இன்றைக்கும் ரசிகர்கள் குறையாமல் அதிகரித்துக் கொண்டே உள்ளனர்.

இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகின்றது என்றால் அந்த படத்தின் பாடல் கேசட்டுகளுக்கு ரசிகர்கள் அடித்துக் கொள்வார்கள். அந்த அளவிற்கு இவர்கள் கூட்டணியில் பாடல்கள் மெஹா ஹிட்டாக அமைந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆன மாநாடு படத்தில் கூட இவர்கள் கூட்டணியில் ஒரு பாடலும் சிம்பு படத்திற்காக யுவன் சங்கர் ராஜா அமைத்த பின்னணி இசை அனைவராலும் பாராட்டப்பட்டது.
கதை: இப்படியான நிலையில் சிம்பு நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் மன்மதன். இரட்டை வேடங்களில் நடித்து சிம்பு அசத்தியிருப்பார். காதலனுக்கு துரோகம் செய்யும் காதலியைக் கொல்லும் காதலன், அதன் பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்கின்றான். இதனால் காதலன்களை ஏமாற்றும் காதலிகளை தேடித் தேடிக் கொலை செய்யும் இந்த கதை அன்றைய தமிழ் சினிமாவுக்கு ரொம்பவுமே புதிய கதைக்களம். ஆனாலும் இளைஞர்கள் இந்த படத்தை கொண்டாடித் தீர்த்தனர்.

மன்மதன் 2: 2004ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என சிம்பு ரசிகர்கள் மத்தியில் பேச்சு ரொம்ப நாட்களாகவே இருந்து வருகின்றது. அதன் அடிப்படையில் ரசிகர்களும் இணையத்தில் Come Back Manmadhan என்ற ஹேஷ்டேக்கினை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்தினை எடுக்கும் எண்ணம் சிம்புவிடம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

தக் லைஃப்: சிம்பு தற்போது உலகநாயகன் கமல் ஹாசனின் 234வது படமான தக் லைஃப் படத்தில் நடித்து வருகின்றார். மேலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தான் நடிப்பது மட்டும் இல்லாமல் அந்த படத்தினை சிம்புவே தயாரிக்கவுள்ளார் என்ற தகவலும் இணையத்தில் உலா வருகிறது. இந்த படத்தினை முதலில் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் பேச்சுகள் முதலில் அடிபட்டது.

சரியான நேரம்: இந்நிலையில் மன்மதன் படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக 2கே கிட்ஸ் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற பேச்சும் அடிபடுகின்றது. ஏற்கனவே வெளியான லவ் டுடே படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவைக் கொடுத்ததால், மன்மதன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்க இதுவே சரியான நேரம் எனவும் பேச்சுகள் அடிபடுகின்றது.


Click it and Unblock the Notifications











