STR Vetrimaaran: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு... பிரபல தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட் அப்டேட்!
சென்னை: சிம்பு தற்போது தனது 48வது படத்திற்காக ரெடியாகி வருகிறார். தேசிங் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இதனிடையே சிம்பு - இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சொன்ன தகவல் கோலிவுட்டையே பரபரப்பாக்கியுள்ளது.
சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன், தற்போது விடுதலை 2ம் பாகம் இயக்கி வருகிறார். சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். சூர்யா, அமீர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் விஜய்யின் தளபதி 69 படத்தையும் வெற்றிமாறன் தான் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுபற்றி விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே வெற்றிமாறன் - சிம்பு கூட்டணி குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அப்டேட் கொடுத்துள்ளார். சிம்புவுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் 2021 நவம்பரில் வெளியானது.
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. முன்னதாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது சிம்புவால் பலமுறை ட்ராப் ஆகும் நிலைக்கு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த வதந்திகளையெல்லாம் கடந்து மாநாடு வெளியாகி வெற்றிப் பெற்றது. மாநாடு கன்ஃபார்ம் ஆகும் முன்னர் சிம்புவின் படத்தை இயக்க வெற்றிமாறனை தான் செலக்ட் செய்திருந்தாராம் சுரேஷ் காமாட்சி.
இதனையடுத்து வெற்றிமாறன் சிம்புவுக்கு ஒரு கதை சொன்னதாகவும், ஆனால் இக்கூட்டணி அப்போது இணைய முடியாமல் போய்விட்டதாகவும் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். அதற்கு முன்பு வடசென்னை படத்திலும் சிம்புவை ஹீரோவாக நடிக்க வைக்க வெற்றிமாறன் முயற்சி செய்திருந்தார். தனுஷின் கால்ஷீட் பிஸியாக இருந்ததால் சிம்புவை வைத்து இயக்கவிருந்தாராம் வெற்றிமாறன். ஆனால் அப்போதும் சிம்பு - வெற்றிமாறன் காம்போ இணைய முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் காமாட்சி சொன்ன இந்த தகவல் தற்போது சிம்பு ரசிகர்களிடம் தீயாக பரவி வருகிறது. இதனால் இனிவரும் நாட்களில் மீண்டும் சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி கண்டிப்பாக இணையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அப்படி சிம்பு, வெற்றிமாறன் கூட்டணி இணைந்தால், அந்தப் படம் தாறுமாறாக இருக்கும் எனவும், விரைவில் அது நடக்கும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











