வசூலில் தங்கலானை ஓரம் கட்டிய ஸ்ட்ரீ 2.. அம்மாடியோவ்.. முதல் நாளில் மட்டும் இத்தனை கோடிகளா?
மும்பை: இந்த ஆண்டு ஆகஸ்ட் 15இல் அதாவது சுதந்திர தினத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்தப் படங்கள் என்றால் அதில் 12 படங்களை பட்டியலிடலாம். இந்த 12 படங்களில் தென்னிந்தியாவில் அதிக கவனம் ஈர்த்த படம் என்றால் அது விக்ரம் நடிப்பில் வெளிவந்த தங்கலான். இந்தப் படத்தினை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். தங்கலான் படம் முதல் நாளில் ரூபாய் 26.44 கோடிகளை வசூல் செய்தது. இது நடப்பு ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்களின் முதல் நாள் வசூலில் அதிக வசூல் எனப்படுகின்றது. சுதந்திர தின வெளியீடுகளில் வசூலில் தங்கலான் படத்தை ஓரம் கட்டிய படமும் உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
ஏற்கனவே கூறியதைப்போல், ஆகஸ்ட் 15இல் 12 படங்கள் வெளியானது. இதில், இந்தியில், அக்ஷய்குமார் நடிப்பில் கேல் கேல் மெய்ன், ஜான்ஆபிரகாம் நடிப்பில் உருவான வேதா, ராஜ்குமார் ராவ் நடிப்பில் உருவான ஸ்த்ரீ 2 ஆகிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல் தமிழில் விக்ரம் நடித்து பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான், அருள்நிதி நடித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய டிமான்ட்டி காலனி 2, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரகு தாத்தா ஆகிய படங்களும் ரிலீஸ் செய்யப்பட்டது.

தெலுங்கைப் பொறுத்தவரை ரவி தேஜா நடிப்பில் உருவான மிஸ்டர் பச்சன், ராம் பொத்தினேனி நடிப்பில் உருவான டபுள் ஐ ஸ்மார்ட் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. தென்னிந்திய சினிமாக்களிலேயே தனக்கென தனி அடையாளத்தை எப்போதும் கொண்டுள்ள சினிமா என்றால் அது மலையாள சினிமாதான். அவ்வகையில் மலையாளத்தில் பாசில் ஜோசப் நடித்த நுணகுழி படமும் சிஜு சன்னி, அமித் மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வாழ - பயோபிக் ஆப் எ பில்லியன் பாய்ஸ் என்ற படமும், ரதீஷ் சுந்தர் நடித்த மாவோயிஸ்ட் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளது.
தங்கலான்: இதில் தமிழில் தங்கலான் படம் முதல் நாளில் ரூபாய் 26.44 கோடிகளை வசூல் செய்தது. இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதேபோல் டிமான்ட்டி காலனி 2 படம் முதல் நாளில் ரூபாய் 3.5 கோடிகளை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. ரகு தாத்தா படம் முதல் நாளில் ரூபாய் 50 லட்சம் வெளிவந்தது.

அதிக வசூல்: இந்திய திரை உலகிலேயே அதிக வசூலைக் குவிக்கும் அதேநேரத்தில் அதிக பணப்புழக்கம் உள்ள சினிமா உலககங்கள் என்றால் அது இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களைக் கூறலாம். அப்படி இருக்கும்போது, தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆன தங்கலான் ரூபாய் 26.44 கோடிகளை முதல் நாளில் வசூல் செய்தது. ஆனால் இந்தியில் ரிலீஸ் ஆன ஸ்ட்ரீ 2 படம் முதல் நாளில் மட்டும் ரூபாய் 76.5 கோடிகளை வசூல் செய்துள்ளது. இது ஆகஸ்ட் 15இல் ரிலீஸ் ஆன படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தப் படம் இந்தியா முழுவதும் வெளியானது.

மகிழ்ச்சி: இது தங்கலான் படத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். அதிக வசூல் குவித்த படம் என்பதால் ஸ்ட்ரீ 2 படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர். அதேநேரத்தில் தங்கலான் படம் இந்தியில் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை. இந்தியில் தங்கலான் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications











