Suriya 45: தங்கலான் வெற்றி! பா.ரஞ்சித் உடன் இணையும் சூர்யா.. டைட்டிலே வேற லெவலில் இருக்கே!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய டாப் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். இவரது படங்கள் என்றால், விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகின்றார். இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள படமான தங்கலான் படம், ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் பூஜை நடைபெற்றது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இந்தியிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

படம் குறித்த விமர்சனங்களில் மிகவும் முக்கியமானது, படம் பேசும் அரசியல்தான். நாகர்கள், பௌத்தம், பூர்வகுடி மக்கள் என கோலார் தங்கவயலை கதைக்களமாகக் கொண்டும், மாய எதார்த்த திரைக்கதையைக் கொண்டும் படத்தினை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித். இந்த காரணங்களுக்காவே படத்தினை ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக விக்ரம் போன்ற உலகம் போற்றும் நடிகரை மிகச் சரியாகப் பயன்படுத்தி அவருக்கும் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது மட்டும் இல்லாமல், தான் கூறவந்த கருத்தையும் தெளிவாகக் கூறியுள்ளார்.
சூர்யா 45: சூர்யாவின் 45வது படத்திற்கு ஜெர்மன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை தங்கலான் படத்தினைத் தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் 25வது படமாகவும் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பாடலாசிரியர் மதன் கார்க்கியும் கலந்து கொண்டுள்ளார்.

இரண்டாம் உலகப்போர்: இந்த பூஜையின்போது படத்தின் போஸ்டரும் இடம் பெற்றுள்ளது. அதில் வானத்தில் இருந்து போர் விமானத்தில் இருந்து, பாராசூட் மூலம் ஒருவர் குதிப்பதைப் போல் இருக்கின்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள தங்கலான் படத்தினையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. அதே நிறுவனம்தான் தற்போது ஜெர்மன் படத்தையும் தயாரிக்கின்றது. இரண்டாம் உலகப்போரை மைய்யப்படுத்திய கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

கங்குவா: அதேபோல், சூர்யாவின் கங்குவா படத்தினையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் சிவா இயக்கியுள்ளார். மேலும் இதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











