Vijayakanth - எனக்கு கட் அவுட் வேண்டாம் விஜய் தம்பிக்கு மட்டும் அடிங்க.. விஜயகாந்த்துக்கு எவ்ளோ பெரிய மனசு
சென்னை: விஜய் பற்றி விஜயகாந்த் கூறிய விஷயம் குறித்து சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் கூறியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அதனை பார்த்த ரசிகர்கள் விஜயகாந்த்துக்கு உண்மையிலேயே பெரிய மனுஷன் என நெகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
விஜயகாந்த்தின் கரங்கள் ஏகப்பட்ட பேருக்கு உதவியிருக்கின்றன அந்த உதவியின் காரணமாக நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கும் சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அதிகம் பேர் இருக்கிறார்கள். அந்த செலிபிரிட்டிகளில் ஒருவர்தான் விஜய். விஜய் மட்டுமின்றி சூர்யா, ஷாம் என பலருக்கும் பிரச்னை வந்தபோது முதல் ஆளாக களத்தில் இறங்கி தன்னால் முடிந்த உதவியை செய்துகொடுத்தவர். ஹீரோக்களை மட்டும் கவனிக்காமல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் அவர் யோசித்தார்.

விஜய்க்கு செய்த உதவி: விஜய் இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரது படங்கள் ஒவ்வொன்றும் அசால்ட்டாக 100 கோடி ரூபாயை வசூலித்து மெர்சல் செய்கின்றன. ஆனால் தற்போது டாப்பில் இருக்கும் விஜய் அவரது கரியரின் ஆரம்பத்தில் மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்தார். எப்படியாவது தனக்கான ஒரு இடத்தைல் நிலையாக பிடித்துவிட வேண்டும்; மக்கள் மத்தியில் அடையாளப்பட்டிட வேண்டும் என தவித்துக்கொண்டிருந்தார். சந்திரசேகர் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. கடைசியாக விஜயகாந்த்திடம் உதவி கேட்டார்.
செந்தூரப்பாண்டி: அதன்படி விஜய்யின் செந்தூரப்பாண்டி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார் விஜயகாந்த். அவர் அப்படி செய்தபோது அவரது படங்கள் அசால்ட்டாக 100 நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் தன்னை வளர்த்துவிட்ட இயக்குநரின் மகன் வளர வேண்டும் என்பதற்காக எதையும் யோசிக்காமல் 18 நாட்கள் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார் விஜயகாந்த். எஸ்.ஏ.சந்திரசேகர் கணக்கு போட்டபடி அந்தப் படம் மெகா ஹிட்டானது. விஜய்க்கும் பெரும் அடையாளத்தையும், வெளிச்சத்தையும் கொடுத்தது.
பெரும் மரியாதை: அதனாலேயே விஜயகாந்த் மீது விஜய்க்கு தனி மரியாதை எப்போதும் இருக்கும்.ஆனால் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாதபோது விஜய் நேரில் சென்றுகூட பார்க்கவில்லையே என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் விஜய் சந்திக்க விரும்பினார்; விஜயகாந்த் குடும்பம்தான் எந்த பதிலும் சொல்லவில்லை என்று புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இருந்தாலும் அவர் மீது இருந்த பாசம் விஜய்க்கு குறையவில்லை என்பது நேற்று முன் தினம் நள்ளிரவு விஜயகாந்த்தின் உடலை பார்த்து அவர் கலங்கியபோது அனைவருக்கும் புரிந்தது.
ஜாக்குவார் தங்கம் பேட்டி: இந்நிலையில் பிரபல சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் இரண்டு பேர் குறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நான் ஒரு ஜிம் திறந்தேன். அந்த ஜிம்மை திறப்பதற்கு அப்போது ஒரு ஹீரோவிடம் சொல்லியிருந்தேன். அவரும் முதலில் வருவதாக சொல்லியிருந்தார். அதனை நம்பி நானும் இருந்தேன். ஆனால் திடீரென்று அவரது உதவியாளர் ஃபோன் செய்து இல்லை அண்ணனால் வர முடியாது என்று சொல்லிவிட்டார்.
விஜயகாந்த்துக்கு ஃபோன்: உடனே நான் ஏன் இதை முன்னாடியே சொல்லிருக்கலாமே என சொல்லிவிட்டு விஜயகாந்த்துக்கு ஃபோன் செய்து ஒரு ஜிம் திறக்கிறேன் நீங்கள் வர வேண்டும் என்றேன். சரி வந்துட்டா போச்சு என்று சொல்லி தேதியை கேட்டுக்கொண்டார். பிறகு ஒருநாள் நேரில் சந்தித்தபோது அந்த ஜிம் திறப்பு விழாவுக்கு விஜய்யை அழைத்திருக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அவரோ அப்படியா விஜய் தம்பி வருதா; அப்போ எனக்கு கட் அவுட் வேண்டாம் தம்பிக்கு மட்டும் வை போதும் என்று சொல்லிவிட்டார்.
விஜய் சொன்ன விஷயம்: அதனையடுத்து விஜய்யிடம் சென்று ஜிம் திறப்பு விழாவுக்கு அழைப்பை கொடுத்துவிட்டு விஜயகாந்த் சாரும் வருகிறார் என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவரோ அப்படியா.. சரி அண்ணா நீங்க எனக்கு கட் அவுட் வெச்சிடாதீங்க.. விஜயகாந்த் அண்ணாவுக்கு மட்டும் வைங்க போதும் என்று சொல்லிவிட்டார். நான் இறுதியாக இரண்டு பேருக்குமே அடித்தேன். அந்த விழாவுக்கு அவர்கள் இரண்டு பேருமே வந்தார்கள்.முக்கியமாக விஜயகாந்த் ஷூட்டிங்கிலிருந்து மேக்கப்புடனேயே வந்துவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











