Captain Vijayakanth: ஊருக்கே சோறு போட்ட மனுஷன்.. கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் ஸ்பெஷல்!
சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் தொண்டர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ந் தேதி மதுரை மாவட்டம் விருதுநகரில் பிறந்தவர் தான் விஜயகாந்த். இவரது நிஜப்பெயர் விஜயராஜ் சினிமாவிற்காக விஜயகாந்த்தாக மாறினார்.

இன்றைய தலைமுறையினருக்கும் விஜயகாந்த் என்றால் மீம்ஸ் போடும் ட்ரோல் மெட்டிரியலாகத்தான் தெரியும். ஆனால், அவரின் தங்கமான மனசும். ஊருக்கு எல்லாம் சோறு போட்ட கதையும் பலருக்கு தெரியாது. அதை இந்த பகுதியில் பார்க்கலாம்.
விஜயகாந்த்: மதுரையிலிருந்து சென்னை வந்த விஜயகாந்த் பல அவமானங்களை சந்தித்தார். அவரின் நிறத்தை பற்றி பலரும் கேலியாக பேசினர். உழைப்பை மட்டுமே மூலதனமாக நம்பிய விஜய்காந்திற்கு நிறம் ஒரு தடையாக இல்லை. ஜெயிப்பது மட்டுமே எண்ணமாக இருந்தது. ஆனால், அந்த நிறமே தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய நெருக்கத்தை ஏற்படுத்தியது.
முதல் படம்: எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் இனிக்கும் இளமை என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானார் விஜயகாந்த். அந்தப் படத்தின் நாயகனாக சுதாகர் நடித்திருந்தார். இதையடுத்து, ஆர் செல்வராஜ் இயக்கத்தில் அகல் விளக்கு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
முக்கியமான படம்: சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்தின் திரைப்பயணத்தை மாற்றியது. நடிகராக இருந்த விஜயகாந்தை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய இப்படம் இது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனராக அறிமுகமானதும் இந்த படத்தில்தான். இதைத் தொடர்ந்து சிவப்பு மல்லி , நெஞ்சில் துணிவிருந்தால், சாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது, பார்வையின் மறுப்பக்கம், சிவந்தகண்கள், பட்டணத்து ராஜாக்கள், ஓம்சக்தி, ஆட்டோ ராஜா என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்.
நடிகர் சங்கத்தலைவர்: இதையடுத்து 1999ம் ஆண்டில் இருந்து 2004ம் ஆண்டு வரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த நேரத்தில் நடிகர் சங்கம் மிகுந்த பண கஷ்டத்தில் இருந்தது.அப்போது ஒட்டுமொத்த நடிகர்களையும் அழைத்துக் கொண்டு மலேசியா சென்று கலை நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கத்தின் கஷ்டத்தை அடைத்து நிர்வாகத்தில் சிறந்தவராக விளங்கினார் விஜயகாந்த்.
ஊருக்கே சோறு போட்டவர்: அதேபோல எங்கு இவருடைய படப்பிடிப்பு நடந்தாலும், அங்கு இருக்கும் அழைத்து டெக்னிஷனுக்கும் சோறு போட்டு அழகுப்பார்த்தவர் விஜயகாந்த். மற்ற படப்பிடிப்பில் டீ கொடுத்தார், விஜயகாந்த் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் ஹார்லிக்ஸ் மற்றும் சூப் கொடுப்பார்கள். யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்று அனைவருக்கும் சோறுபோட்டவர் விஜயகாந்த் என்று மக்கள் இன்றும் அவரை கொண்டாடி வருகின்றனர்.
குவியும் வாழ்த்து: தற்போது உடல்நலக்குறைவுடன் இருக்கும் விஜயகாந்த் மீண்டும் உடல்நலம் தேறிவரவேண்டும் என்று பலரும் இறைவனை வேண்டி வருகின்றனர். இன்று 71வது பிறந்த நாளை கொண்டாடி வரும் கேப்டன் விஜயகாந்துக்கு ரசிகர்கள் , தொண்டர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











