S.K 25: இனி சிவாஜி, ரஜினி மட்டும் இல்ல.. S.K-வும் பராசக்தி ஹீரோதான்.. அதிரடியாக வந்த S.K 25 டைட்டில்
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது மட்டும் இல்லாமல், படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் மீது ரசிகர்களைக் கடந்து மொத்த திரையுலகத்தினர் மத்தியிலும் பெரும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு படக்குழுவினர் பராசக்தி என பெயரிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியும் அவரது படங்களின் கலெக்ஷனும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. இவரது, கடைசிப் படமான அமரன் உலகம் முழுவதும் ரூபாய் 350 கோடிகள் வசூல் செய்தது. அடுத்து இவரது நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தினை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இது சிவகார்த்திகேயனின் 23வது படம். தனது 24வது படத்தில், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

மிகவும் பிசியாக இருந்தாலும், சரியான கதைகளைத் தேர்வு செய்வதிலும், கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார். அப்படித்தான் தனது 25வது படத்தினை சுதா கொங்கரா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிக்க கமிட் ஆகி, பின்னர் படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர்தான் இந்தப் படம் சிவகார்த்திகேயன் வசம் வந்தது. இந்தப் படத்தின் பூஜை தொடங்கிய நாளில் இருந்து ரசிகர்கள் செம ஹேப்பியாக உள்ளனர். காரணம், சுதா கொங்கராவின் படங்கள் என்றாலே, அது, கட்டாயம் மக்களுக்குப் பிடிக்கும், எப்படியும் அழுத்தமான கதைக்களமாக இருக்கும் என்பதால், தேசிய விருதுகள் கூட கிடைக்கலாம் என பேசி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் 25: பொதுவாக ஒரு நடிகரின் 25வது படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகரின் படம் என்றால் சொல்லவா வேண்டும்?, சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடிக்க சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளார் என்ற தகவல் அரசல் புரசலாக வந்தபோதே ரசிகர்கள் மகிழ்ச்சி ஆகிவிட்டனர். தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, டைட்டில் அறிவிப்பு, ஃபர்ஸ்ட் லுக் என அடுத்தடுத்த அப்டேட்டுகளால் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். சிவகார்த்திகேயனின் 25 வது படத்திற்கு பராசக்தி என பெயர் சூட்டவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. தகவல்கள் வெளியானபோது, சிவாஜியின் தீவிர ரசிகர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பராசக்தி ஹீரோ: ஆனாலும் படத்திற்கு பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்புக்கு படக்குழு டைட்டில் டீசர் என வீடியோ வெளியிட்டுள்ளது. பராசக்தி என்பது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வசனம் எழுதி, சிவாஜி முதன் முதலாக சினிமாவில் அறிமுகமான படத்தின் பெயர் பராசக்தி. இப்போது சிவகார்த்திகேயன் படத்திற்கும் பராசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர், சமூகவலைதளவாசிகள், இனிமேல், சிவாஜி ரஜினி மட்டும் பராசக்தி ஹீரோ இல்லை, சிவகார்த்திகேயனும் பராசக்தி ஹீரோ தான் என பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











