ரஜினியை வைத்து முதல் மரியாதை ஸ்டைலில் ஒரு படம்.. விரைவில் ஓய்வு.. பராசக்தி இயக்குநர் அதிரடி
சென்னை: சிவகார்த்திகேயனை வைத்து சுதா கொங்கரா இயக்கியிருக்கும் பராசக்தி திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸாகிறது. 2026ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் வெல்வாரா இல்லை சிவகார்த்திகேயன் வெல்வாரா என்ற டிபேட் இப்போதே எழ ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா ரஜினியை வைத்து படம் இயக்கும் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மணிரத்னம் மற்றும் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. அவர்களிடம் வேலையை கற்றுக்கொண்டு துரோகி படத்தை இயக்கி தமிழில் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அதற்கு பிறகு சில வருடங்கள் கேப் விட்ட அவர்; கடந்த 2016 மாதவன், ரித்திகா சிங் உள்ளிட்டோரை வைத்து இறுதிச்சுற்று படத்தை இயக்கினார். பாக்ஸிங்கை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரித்திகா சிங் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கினார்.
சூரரைப் போற்று: இறுதிச்சுற்று வெற்றிக்கு பிறகு குரு, புத்தம் புது காலை படங்களை இயக்கினாலும்; சுதாவின் கரியரை உச்சத்துக்கு கொண்டு சென்ற படம் என்றால் சூரரைப் போற்று படம்தான். சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்த அந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யாவும், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜிவி பிரகாஷும் பெற்றார்கள். மொத்தமாக ஐந்து தேசிய விருதுகளை அப்படம் அள்ளியது.

பராசக்தி: இப்போது சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்கியிருக்கிறார். முதலில் 2026 ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகும் நிலைமை உருவாகியிருக்கிறது. ஒன்பதாம் தேதி ஜனநாயகன் படம் வருவதால் அடுத்த வருட பொங்கல் விஜய் Vs சிவகார்த்திகேயன் என்ற நிலைமை உண்டாகிவிட்டது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு சுதா கொங்கரா அளித்த பேட்டி ட்ரெண்டாகியுள்ளது.
சுதா கொங்கரா பேட்டி: அந்தப் பேட்டியில் அவர், "சிவகார்த்திகேயனிடம் முதலில் ஒரு காதல் கதையைத்தான் கொண்டு சென்றேன். என்னுடைய நெருங்கிய நண்பரான அஞ்சலி மேனன் இப்போது ஒரு காதல் கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தெலுங்கில் ஒரு நாவல் படித்தேன். ரொம்ப பிடித்திருந்தது. அது முழுக்க முழுக்க காதல் கதைதான். அப்படி ஒரு காதல் கதையை எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. பெரிய ஹீரோவை வாஇத்து அந்தப் படத்தை எடுக்க வேண்டும்.
ரஜினியை வைத்து: அந்த பெரிய நடிகரின் மிகப்பெரிய ரசிகை நான். அவரை வைத்து அந்தக் காதல் கதையை எடுக்க வேண்டும் என்ற ஆசை. அவர் வேறு யாருமில்லை ரஜினிகாந்த்தான். அவரை வைத்து முதல் மரியாதை ஸ்டைலில் ஒரு படம் எடுக்க வேண்டும். அந்தப் படத்துக்கான கதை என்னிடம் இருக்கிறது. அதை முழுவதும் ரெடி செய்ய வேண்டும். காதல் கதை மட்டுமில்லை எல்லா விதமான படங்களையும் எடுக்க விருப்பம்தான். அதேசமயம் விரைவில் சினிமாவிலிருந்து ஓய்வு பெற வேண்டும் எனவும் நினைக்கிறேன். நான் சோர்வடைந்துவிட்டேன் என்றே சொல்லலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications











