இது வேற லெவல்.. பாலா, சூர்யாவுடன் இணைந்த சூரரைப் போற்று இயக்குநர்.. என்ன பண்ணப் போறாங்க தெரியுமா?
சென்னை: பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகும் புதிய படத்தில் சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கராவும் இணைந்துள்ளாராம்.
நந்தா திரைப்படம் சூர்யாவுக்கு சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தந்தது. அதன் பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா மற்றும் விக்ரம் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படத்தில் அதுவரை தமிழ் சினிமா கண்டிராத நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் சூர்யா.
அதன் பிறகு சூர்யா மற்றும் பாலா இருவரும் இணைந்து பணியாற்றும் சூழல் நிலவாத நிலையில், தற்போது மீண்டும் இருவரும் இணைந்து புதிய படத்தை ஆரம்பித்துள்ளனர்.

மிரட்டிய பாலா
இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி என பல படங்களை கொடுத்து அசத்தியவர் இயக்குநர் பாலா. சியான் விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, சசிகுமார், அதர்வா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இவர் நடிப்பில் நடித்து தங்களின் முழு நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வந்தனர்.

தேசிய விருது இயக்குநர்
1999ம் ஆண்டு வெளியான தனது முதல் படத்திலேயே சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை சேது திரைப்படம் வென்றது. தமிழ்நாடு சார்பாக சிறந்த இயக்குநர் விருது இயக்குநர் பாலாவுக்கு கிடைத்தது. பிதாமகன் படத்தில் நடித்த சியான் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார் பாலா. மேலும், பரதேசி படத்திற்காக பல விருதுகளை வென்றார்.

சொதப்பிய படங்கள்
தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் பாலாவுடன் இணைந்து நடிக்க முன்னணி நடிகர்கள் திடீரென சில பல கருத்து வேறுபாடு காரணங்களால் மறுத்தனர். விஷால், ஆர்யாவை வைத்து அவன் இவன் படத்தை இயக்கினார். அதர்வாவை வைத்து பரதேசி படத்தை இயக்கினார். சசிகுமாரை வைத்து தார தப்பட்டை படத்தை இயக்கினார். தார தப்பட்டை திரைப்படம் சரியாக போகாத நிலையில், பாலாவின் மார்க்கெட் சரியத் தொடங்கியது.

விக்ரம் மகன் படம்
தனக்கு ஒரு சேது படத்தை கொடுத்தது போல தனது மகனுக்கு பாலா ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுப்பார் என எதிர்பார்த்து டோலிவுட்டில் ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்ய சொல்லியிருந்தார். வர்மா எனும் பெயரில் அந்த படத்தை பாலா இயக்கிய நிலையில், அது சரியாக இல்லை என்றும் ஆதித்ய வர்மா என வேறு ஒரு இயக்குநரை வைத்து புதிய படம் ஒன்று உருவானது பாலாவை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தியது.

கைகொடுத்த சூர்யா
பாலா அதன் பிறகு ஃபீல்ட் அவுட் ஆன நிலைமைக்கு தள்ளப்பட்ட நேரத்தில் மீண்டும் நடிகர் சூர்யா பாலாவுக்கு கைகொடுத்து இருக்கிறார். தனது 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள பாலாவின் படத்தில் தானே நடிக்கிறேன் என்றும் உறுதியளித்து இந்த படத்தை உடனடியாக ஆரம்பித்துள்ளார்.

சுதா கொங்கராவுக்கு என்ன வேலை
இந்நிலையில், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் சூரரைப் போற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இணைந்து பணியாற்றப் போகிறார் என்கிற அதிரடியான தகவல் சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. அப்படி இந்த படத்தில் சுதா கொங்கரா என்ன வேலை செய்யப் போகிறார் தெரியுமா கிரியேடிவ் புரொட்யூசர் பணியை சூர்யாவுக்காக சுதா கொங்கரா செய்யப் போகிறாராம்.

பரதேசி படத்தில்
ஏற்கனவே இயக்குநர் பாலா இயக்கத்தில் அதர்வா, வேதிகா நடிப்பில் வெளியான பரதேசி திரைப்படத்திலேயே இவர் தான் கிரியேட்டிவ் புரொட்யூசராக பணியாற்றினாராம். தற்போது அந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. சுதா கொங்கரா இந்த படத்தில் பணியாற்றும் நிலையில், எந்தவொரு தவறும் நடக்க வாய்ப்பில்லை என்றும் படம் தரமாக வரும் என்றும் சூர்யா ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

அஜித் படம் பண்ணுவாரா
இறுதிச்சுற்று, சூரரைப் போற்று உள்ளிட்ட இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்து யாரை இயக்கப் போகிறார் சுதா கொங்கரா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நிலவி வருகிறது. ஆனால், சூர்யா, பாலா படத்தில் கிரியேட்டிவ் புரொட்யூசராக பணியாற்றி வருகிறார் சுதா கொங்கரா. அடுத்து அஜித்துடன் இணைந்து சுதா கொங்கரா பணியாற்றுவார் என்கிற பேச்சும் உலாவி வருகிறது. ஆனால், இதுவரை எந்தவொரு அறிவிப்பும் அது தொடர்பாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











