Parasakthi Title Teaser Review: பராசக்தி.. இது சிவகார்த்திகேயனின் அரசியல்.. டைட்டில் டீசர் விமர்சனம்
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா என பலரது நடிப்பில் உருவாகிவரும் படம் பராசக்தி. இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 25வது படம் ஆகும். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைக்கின்றார். ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு இந்தப் படம் 100வது படம் ஆகும். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது. இப்படியான நிலையில் படத்தின் டைட்டில் டீசர் இன்று அதாவது ஜனவரி 29ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
மொத்தம் 1.48 நிமிடங்களுக்கு இந்த டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டீசரின் முதலிலேயே சிவகார்த்திகேயனைக் காட்டுகின்றனர். கதவைத் திறந்து கொண்டு ஒரு அறைக்குள் நுழைகின்றார். அங்கு உள்ள போர்டில், Students Do Not Touch என எழுதியுள்ளது. அதன் பின்னர், எம்.ஜி.ஆரின், 'அச்சம் என்பது மடமையடா பாடல்' இசைக்கப்படுகின்றது. சென்னையின் மிகவும் முக்கியமான கல்லூரியான பச்சையப்பன் கல்லூரி காட்டப்படுகின்றது. பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற அல்லது பச்சையப்பன் கல்லூர் மாணவர்கள் ஒருங்கிணைந்து முன்னெடுத்த அரசியல் செயல் பாடு குறித்து படம் பேசுகின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

அதன் பின்னர், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா ஆகியோரைக் காட்டுகின்றனர். இதில் ரவி மோகன் காவல் அதிகாரியாக வருகின்றார். மேலும் அவர் சிவகார்த்திகேயன் உருவப்படத்தை வைத்து துப்பாக்கியால் சுடுகின்றார். ஓடிவரும் அதர்வாவை ஸ்ரீலீலா காப்பாற்றுகின்றார். நான் வரவில்லை என்றால் செத்திருப்பாய் என தெலுங்கில் திட்டுகின்றார். இதன் மூலம் தமிழர்களும் தெலுங்கர்களும் சென்னையில் தொடக்கத்தில் இருந்தே இணைந்து வாழ்ந்து வந்தவர்கள்தான் என காட்சிப்படுத்தும் விதமாக உள்ளது.
இருவர்: அதுவரை சிவகார்த்திகேயனின் பின் புறத்தை மட்டுமே காட்டி வந்த நிலையில், சிவகார்த்திகேயனின் முகத்தினைக் காட்டும் காட்சி அட்டகாசமாக உள்ளது. குறிப்பாக இந்தக் காட்சி, இருவர் படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் மோகன் லால் என இருவரும் மாடியில் இருந்து மக்களைப் பார்ப்பார்கள். அதுபோல இந்தக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
பராசக்தி: கட்டிடத்தின் மேல் இருந்து கீழே உள்ள மாணவர்களைப் பார்த்து, சேனை ஒன்று வேண்டும், பெருஞ்சேனை ஒன்று வேண்டும் என முழக்க மிடுகின்றார். கீழே உள்ள மாணவர்களும் அதேபோல் முழக்கமிடுகின்றார்கள். அதன் பின்னர், தொடக்கத்தில் காட்டப்பட்ட, Students Do Not Touch என்பது அழிக்கப்பட்டு, Do Not Touch Students என எழுதப்பட்டுள்ளது. அதன் பின்னர் படத்தின் டைட்டில் காட்டப்படுகின்றது.
அரசியல்: கதாபாத்திரங்கள் அணிந்துள்ள உடைகளையும், கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சைக்கிள்களையும் பார்க்கும் போதும், எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1960ஆம் ஆண்டு வெளியான மன்னாதி மன்னன் படத்தின் பாடலான 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா' டீசரில் ஒலிக்கின்றது. இதை வைத்துப் பார்க்கும்போது, கதை நடக்கும் காலகட்டம் 1960களுக்கு பின்னர் என புரிந்து கொள்ள முடிகின்றது. மேலும் இந்தப் பாடலும், ஸ்ரீலீலா வரும் காட்சியும் சமகால அரசியல் நகர்வுகளை நையாண்டி செய்யும் விதமாக அமைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











