சூர்யா இல்லாமலே சுதா கொங்கரா படம் சூட்டிங் நடக்கிறதா?.. வாடிவாசல் மாதிரி ஆகாம இருந்தா சரி தான்!
சென்னை: கங்குவா படத்திற்கு பிறகு தமிழில் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு எனத் தொடங்கும் படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்திருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது சத்தமே இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. பாகுபலி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்கள் வெற்றியடைந்து வசூல் வேட்டை நடைபெற்று வரும் நிலையில், நாமும் ஒரு வரலாற்று ஃபேண்டஸி திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொடுத்து பல வருடங்கள் கழித்து மீண்டும் பாக்ஸ் ஆபிஸை பிடிக்கலாம் என்கிற நோக்கத்துடன் சூர்யா நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகர்கள்: மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி செட்டில் ஆகி உள்ள நடிகர் சூர்யா கங்குவா படத்தை பான் இந்தியா படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக பாலிவுட்டில் இருந்து ஹீரோயின் மற்றும் வில்லன் என களமிறக்கி உள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி மற்றும் அனிமல் படத்தில் நடித்த வில்லன் நடிகர் பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
கர்ணன் படத்தில் சூர்யா: மனைவி ஜோதிகாவை போல சூர்யாவும் பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் பிஸியாகி வருகிறார். இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள சூர்யா அடுத்ததாக கர்ணன் என்னும் படத்தில் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூர்யா இல்லாமல் சுதா கொங்கரா படம்: சூரரைப் போற்று படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை சூர்யாவுக்கு தந்த சுதா கொங்கரா அடுத்து சூர்யாவை வைத்து புறநானூறு எனத் தொடங்கும் தலைப்பை கொண்ட படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டதாகவும் ஆனால் இன்னமும் அந்த படப்பிடிப்பில் நடிகர் சூர்யா கலந்து கொள்ளவில்லை. மற்ற நடிகர்களை வைத்து படப்பிடிப்பை தற்போது நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாடிவாசல் என்னாகும்?: வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் உருவாக்கி வரும் நிலையில், அந்த படத்தை முடித்துவிட்டு அவர் வாடிவாசல் படத்தை ஆரம்பிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் சூர்யா அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாகி வருகிறார். வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டது என்றும் வணங்கான் படத்தைப் போல சூர்யாவுக்கு பதில் தனுஷ் நடிப்பார் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரம் ஜோதிகா படம்: சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், நவம்பர் மாதம் மம்மூட்டியுடன் இணைந்து மலையாளத்தில் காதல் தி கோர் படத்தை கொடுத்த ஜோதிகா வரும் மார்ச் 8ம் தேதி பாலிவுட்டில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் உடன் இணைந்து ஷைத்தான் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். மீண்டும் ஒரு இந்தி படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், அவர் நடித்துள்ள வெப்சீரிஸான டப்பா கார்ட்டெல் விரைவில் வர காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











