Sivakarthikeyan: கையில் பெட்ரோல் குண்டு.. சுதா கொங்கரா போட்ட ஸ்கெட்ச்..சம்பவம் செய்யத் தயாரான S.K 25
சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது தனது 24 வது மற்றும் 25வது படங்களில் அதிகம் கவனம் காட்டி வருகின்றார். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், தனது 24 படத்தினை விடவும் 25வது படத்தில் தற்போது தீவிரமாக நடித்து வருகின்றார். சுதா கொங்கரா இயக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படத்தின் அப்டேட் இன்று அதாவது ஜனவரி 28ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு தெரிவித்தது. அதன்படி படக்குழு தரப்பில் இருந்து ஒரு போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. இதில், தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் வேற லெவலில் ஹிட் அடிக்க, சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தாறுமாறாக உயர்ந்துள்ளது. அந்தப் படம் சிவகார்த்திகேயனின் 22வது படம். தனது 23வது படத்தினை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொடுத்துவிட்டார். 24வது படத்தில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடித்து வருகின்றார். அதேநேரத்தில் தனது 25வது படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

சிவகார்த்திகேயனின் இந்த 25வது படம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. அதாவது, இந்தப் படம் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு 100வது படம் ஆகும். இந்தப் படத்தில்தான் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் முதன் முதலாக மாற்று கதாநாயகன் படத்தில் நடிக்கின்றார். அதேபோல், இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சகோதரராக அதர்வா நடிக்கின்றார். இதுமட்டும் இல்லாமல், இந்தப் படத்தில், முதலில் நடிக்க கமிட் ஆனவர், சூர்யா. ஆனால் அவர் சில காரணங்களால் படத்தில் இருந்து விலக, இந்தப் படம் சிவகார்த்திகேயன் கரங்களுக்கு வந்துள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்: கடந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்தே, படத்தின் படப்பிடிப்பு தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தினை டான் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. படத்தின் அப்டேட் இன்று வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் கையில் பெட்ரோல் குண்டுடன் நிற்கின்றார். மேலும் அந்த போஸ்டரில், தீ பரவட்டும் நாளை மாலை 4 மணி முதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புது டைட்டில்: மேலும் நாளை மாலை நான்கு மணிக்கு படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் 25 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வேகமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நாளை படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளதால், பலரும் படத்தின் டைட்டில் பராசக்தி என கூறிவருகின்றனர்.

புறநானூறு: ஏற்கனவே இது தொடர்பன தகவல்கள் இணையத்திலும் சினிமா வட்டாரத்திலும் அதிகம் உலா வந்தது. தீவிரமான சிவாஜி ரசிகர்கள் இந்தத் தலைப்பினை பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவித்திருந்தனர். ஆனாலும், பராசக்தி என்பது உறுதிப் படுத்தப்படாத தகவல் என்பதால், நாளை மாலை வரை ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்க வேண்டும். சூர்யா நடிப்பதாக இருந்தபோது இந்தப் படத்தின் தலைப்பு புறநானூறு என சூட்டப்பட்டிருந்தது.



Click it and Unblock the Notifications











