Suhani Bhatnagar: தங்கல் பட நடிகை உயிரிழப்புக்கு இதுதான் காரணமா... அது என்ன டெர்மடோமயோசிடிஸ்..?
சென்னை: அமீர்கானின் தங்கல் படத்தில் நடித்த சுஹானி பட்னாகர் 19 வயதில் திடீரென உயிரிழந்தார். இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கவனம் ஈர்த்த சுஹானி, உடல் நலக்குறைவால் காலமானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் சுஹானி பட்னாகர் டெர்மடோமயோசிடிஸ் (Dermatomyositis) பாதிப்பால் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
டெர்மடோமயோசிடிஸ் என்றால் என்ன..?
தங்கல் திரைப்படத்தில் பபிதா போகத் என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் சுஹானி பட்னாகர். அவர் 19 வயதில் திடீரென உயிரிழந்தது பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை கொடுத்தது. 2016ல் வெளியான தங்கல் படத்தில் அமீர்கான் ஹீரோவாக நடித்திருந்தார். கீதா போகத், பபிதா போகத் இருவரையும் மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றிய தந்தை மகாவீர் சிங் போகத்தின் கதையாக உருவாகியிருந்தது.

விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் 2000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது தங்கல். இதனால் இந்தப் படத்தில் நடித்த அனைவர் மீதும் ரசிகர்களிடமும் பாலிவுட்டிலும் கவனம் கிடைத்தது. அப்படித்தான் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சுஹானி பட்னாகரும் எதிர்காலத்தில் பெரிய நாயகியாக வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தனது 19வது வயதில் டெர்மடோமயோசிடிஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சுஹானிக்கு ஏற்பட்ட டெர்மடோமயோசிடிஸ் பாதிப்பு பற்றியும் அவர் உயிரிழந்தது குறித்தும் அவரது பெற்றோர் விளக்கம் கொடுத்துள்ளனர். அதன்படி கொஞ்சம் அரிய வகை நோயான டெர்மடோமயோசிடிஸ் பாதிப்பு சுஹானிக்கு இருப்பது தாமதமாகவே தெரியவந்ததாம். இதனால் முதலில் தோல், தசைகளில் வீக்கம் வந்துள்ளது. மேலும் ஸ்கின்னில் வெடிப்புகள் ஏற்பட்டு தசைகள் பலவீனமாக காணப்பட்டுள்ளன. ஆனாலும் இப்படி வருவதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை என சொல்லப்படுகிறது.
அதேநேரம் இது மரபணு பாதிப்பு அல்லது வேறு ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிப்பால் வரவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதேபோல் இந்த பாதிப்பு பெரும்பாலும் 40 முதல் 60 வயதானவர்களுக்கு தான் அதிகம் வரக்கூடும் எனவும், குழந்தைகளில் 5 முதல் 15 வயதுடையவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. இந்த வகையான டெர்மடோமயோசிடிஸ் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு பிஸிக்கல் தெரபி போன்ற பலவகையான தெரபிகள் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறதாம்.
மேலும், ஆரம்ப கட்டத்திலேயே தெரிந்துவிட்டால் டெர்மடோமயோசிடிஸ் நோயை குணப்படுத்திவிட முடியும் எனவும் மருத்துவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். ஆனால் சுஹானி பட்னாகருக்கு டெர்மடோமயோசிடிஸ் பாதிப்பு இருப்பது சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவரது கையில் சிவப்பு நிறத்தில் அலர்ஜி போல இருந்தது. அப்போது அது என்னவென்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் சுஹானியின் உடல்நிலை மோசமான பின்னர் தான் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுவாக முகம், கண் இமைகள், முழங்கைகள் பகுதிகளில் சிவப்பு அல்லது ஊதா நிறமாக மாறும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் சூரிய ஒளியில் படும் போதும் ஸ்கின்னில் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும் என்றும், தசை பலவீனம், ப்ராக்ஸிமல் தசைகள் போன்ற வலிகள், குறிப்பாக தோள்பட்டை, இடுப்பைச் சுற்றிய தசைகளிலும் வலி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படும் என்ற நிலையில் சுஹானிக்கு அதன் பாதிப்பு தீவிரமடைந்ததால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications