“சப்பாத்தியும், ஊறுகாயும் சாப்பிட்டார்.. நல்லா இருக்கார்”.. மணிரத்னம் உடல்நிலை குறித்து சுஹாசினி!
மணிரத்னம் வழக்கமாக உடல்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றது தெரிய வந்துள்ளது.
சென்னை: இயக்குனர் மணிரத்னம் உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகை சுஹாசினியின் டிவீட் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்னத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக நேற்று முன்தினம் இரவு செய்தி வெளியானது. அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் பரவிய தகவலால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

ஏற்கனவே அவருக்கு இதயப் பிரச்சினை இருந்து வந்ததால், அவர் சீக்கிரம் குணமாக வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தித்து வந்தனர்.
இந்நிலையில், மணிரத்னம் உடல்நிலை குறித்து பரவிய தகவல் வதந்தி எனத் தெரியவந்துள்ளாது. அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக தான் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக அவரது மனைவியும், நடிகையுமான சுஹாசினியும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "வழக்கம் போல் இன்று காலை 9.30 மணிக்கு எனது கணவர் அலுவலகம் சென்றார். நாம் பெண்கள் பயிற்சி பட்டறை எனது இல்லத்தில் நடந்தது. நாம் அமைப்பை சேர்ந்த ரூபா ரொட்டியும், மாங்காய் ஊறுகாயும் கொண்டு வந்திருந்தார். அதனை எனது கணவர் ருசித்து சாப்பிட்டார். பின்னர் மீண்டும் அலுவலகம் சென்று ஸ்கிரிப்ட் வேலைகளை பார்த்தார் " எனத் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் உடல்நிலை குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கப் பெற்றதால், தற்போது அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் தற்போது, பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்க உள்ளது. இந்தாண்டு இறுதியில் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











