twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எழுத்துஞானி சுஜாதா!

    By Shankar
    |

    Recommended Video

    எழுத்துலகின் ஞானி சுஜாதா!- வீடியோ

    'ஜனரஞ்சகமான எழுத்து என்றால் என்ன? அதனை தமிழில் எழுதுவது எப்படி என தமிழகம் இவன் மூலம் அறிந்துகொள்ளட்டும்...' என‌ உலகிற்கு இறைவன் அனுப்பிய எழுத்தாளன் சுஜாதா எனும் ரங்கராஜன் நினைவு நாள் இன்று

    உலகின் எந்த துறையினை எடுத்தாலும் அதன் அடி ஆழம் வரை எழுதும் அறிவு அவருக்கு இருந்தது.

    Sujatha death anniversary

    ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை, சங்க இலக்கியம் முதல் விண்வெளி வரை, கண் மருத்துவம் முதல் கணிணி வரை, வரலாறு முதல் ரோபோக்கள் வரை.

    முந்தைய நாள் ஆழ்வார்கள் பெருமையினை அழகிய தமிழில் பேசிவிட்டு, மறுநாள் காலையில் சினிமா விவாதங்களில் பங்கெடுத்துவிட்டு, மாலையே கணிப்பொறியில் தமிழைக் கொண்டுவருவது எப்படி என அவர் பேசியபொழுது இப்படியும் ஒரு மனிதன் சாத்தியமா என்றெல்லாம் வியந்த காலங்கள் உண்டு.

    எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் அவர், அதனை சுவைபட சொல்லும் அழகும் இருந்தது. தொல்காப்பியன், ஆழ்வார்கள், சாக்ரடீஸ், ஐன்ஸ்டீன், பாரதி, புதுமை பித்தன் என எல்லாமும் கலந்த அப்படி ஒரு எழுத்தாளன் இனி தமிழுலக்கிற்கு சாத்தியமே இல்லை.

    கண்ணதாசனும், சீனிவாச ராமனுஜனும் கலந்த கலவை அவர். பிறவி அறிவு அவரிடம் அப்படி இருந்திருக்கின்றது. தமிழுலகம் மறக்கவே முடியாத மாமனிதன், தமிழர் அறிவின் பெரும் அடையாளம்

    நல்ல எழுத்து எது? எப்படி எழுதவேண்டும் என்பதற்கு நவீன காலத்தில் அவரே இலக்கணம். அவர் எழுதிய காலங்கள் தமிழ் எழுத்துலகின் பொற்காலம், படிக்க படிக்க அப்படி ஒரு சுகமும் , திருப்தியும் மகிழ்வும் கொடுத்த எழுத்துக்கள் அவை.

    மனிதர் எல்லாவற்றையும் ரசித்திருக்கின்றார், அதுவும் முழுக்க முழுக்க ரசித்திருக்கின்றார் என்பது மட்டும் உண்மை. அந்த ரசனையினை எழுத்தில் கொடுத்தார்.

    முழுநேர எழுத்தாளன் எல்லாம் அல்ல, அடிப்படையில் அவர் ஒரு பொறியாளர். நேரம் கிடைக்கும்பொழுது எழுதித் தள்ளியிருக்கின்றார் அவ்வளவுதான்.

    எழுத்தில் சம்பாதிக்கும் ஆர்வம் அவருக்கு துளியுமில்லை, தனக்கு தோன்றியதை எழுதியிருக்கின்றார், எழுத்து அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்காக இருந்திருக்கின்றது. வியாபார நோக்கம் அதில் சுத்தமாக இல்லை.

    தன் பார்வையில் இந்த உலகத்தை எந்த நிர்பந்தமும் இன்றி ரசித்திருக்கின்றார், அதனால்தான் அவரின் எழுத்துக்கள் அப்படி வரம்பெற்று வந்திருக்கின்றன.

    பெரும் ஞானிக்குள்ள மனபக்குவம் அவருக்கு இருந்திருக்கின்றது. யார் எதனைக் கேட்டாலும் எழுதிகொடுத்துவிட்டு அவர்போக்கில் இருந்திருக்கின்றார்.

    பூமியின் எல்லா பக்கங்களையும், மானிட வாழ்வின் எல்லா உணர்வுகளையும், விஞ்ஞானத்தின் எல்லா புத்தகங்களையும், சமூகத்தின் எல்லா நகர்வுகளையும் கவனித்திருக்கின்றார்

    குறுகிய வட்டம் அவர் எழுத்தில் இருந்ததல்ல, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தத்துவம் அவர் எழுத்தெல்லாம் ஊறி இருந்தது. அவரின் ஒரு புத்தகத்தை படித்தால் பல நூலகங்களை சுற்றி வந்த அளவு அனுபவம் கிடைத்தது, நீங்களும் படியுங்கள் நிச்சயம் கிடைக்கும்

    தமிழருக்கு பல்சுவை விஞ்ஞான‌ 'எழுத்தறிவித்த இறைவன்' நிச்சயம் அவர்தான்.

    அந்த பல்லறிவு மிக்க எழுத்து ஞானிக்கு அறிவார்ந்த கோடி அஞ்சலிகள்!

    - ஸ்டான்லி ராஜன்

    English summary
    Today legendary writer Sujatha's death anniversary.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X