நடிகை சுஜிபாலாவின் கொலை மிரட்டல் புகார்: கைதாகிறார் இயக்குனர்!
சென்னை: முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்துவிடுவதாக, இயக்குநர் பி.ரவிக்குமார் மிரட்டுகிறார் என்று நடிகை சுஜிபாலா வடபழனி உதவி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
சந்திரமுகி, கோரிபாளையம் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. உண்மை என்ற படத்தில் நடித்து வரும்போது, அந்த படத்தின் டைரக்டர் பி.ரவிக்குமாருக்கும், நடிகை சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, நிச்சயதார்த்தம் முறிந்து போனதாக அறிவித்துவிட்டனர்.

கணவன் மனைவியாக வாழ்ந்தோம்
இந்தநிலையில், சமீபத்தில், டைரக்டர் பி.ரவிக்குமார், சுஜிபாலா எனது மனைவி என்று பகிரங்கமாக பேட்டி கொடுத்தார். அவரது இந்த போட்டி தமிழ்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை மிரட்டல்
ரவிக்குமார் பேட்டிக்கு பதிலடி கொடுத்து, சுஜிபாலாவும் பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில், டைரக்டர் பி.ரவிக்குமாரை தான் மணக்கவில்லை என்றும், அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், படவுலகை விட்டு தன்னை விரட்ட பார்க்கிறார் என்றும் சுஜிபாலா தெரிவித்து இருந்தார்.

போலீசில் புகார்
இந்த நிலையில், நடிகை சுஜிபாலா, வடபழனி உதவி போலீஸ் கமிஷனர் சுப்பராயனை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

இரு குழந்தைகளின் தந்தை
டைரக்டர் பி.ரவிக்குமாருக்கும், எனக்கும் நடந்த திருமண நிச்சயதார்த்தம் முறிந்து விட்டது. நிச்சயதார்த்தத்தின் போது, அவர் எனக்கு வாங்கி கொடுத்த பொருட்களை நான் திருப்பி கொடுத்துவிட்டேன். அவர் ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகளுக்கு தந்தை என்று சுஜிபாலா கூறினார்.

அமிலம் வீச்சு
தற்போது நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தது, அவருக்கு பிடிக்கவில்லை. என்னை மிரட்டுகிறார். எனது பெற்றோரை கொலை செய்துவிடுவதாக சொல்கிறார். எனது முகத்தில் அமிலத்தை வீசி கொன்றுவிடுவேன் என்கிறார்.

உயிருக்கு ஆபத்து
அவரால் எனது பெற்றோர் உயிருக்கும், எனது உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனவே அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், எங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக, உதவி போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

போலீசில் விசாரணை
புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை, இயக்குனர் ரவிகுமார் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறது. "டைரக்டர் ரவிகுமார் மீது நடிகை சுஜிபாலா கொடுத்த புகார் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். இயக்குனர் ரவிகுமாரை அழைத்து விசாரிக்க இருக்கிறோம். இதற்குமேல் இதுபற்றி இப்போது எதுவும் கூற இயலாது" என்று வடபழனி உதவி ஆணையர் சுப்பாராமன் கூறியுள்ளார்.

விரைவில் கைது
சுஜிபாலா, ரவிகுமார் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இருக்குமானால் இன்று அல்லது நாளை அவர் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications











