சுகுமாருக்கு கிடைத்த ராஜமெளலி மரியாதை.. ஷங்கருக்கு 2025ல் கிடைக்குமா?.. கேம் சேஞ்சர் கேமை மாற்றுமா?
சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்பட்டு வந்த ஷங்கர் இந்த ஆண்டு இந்தியன் 2 படத்தைக் கொடுத்து நீங்க பேசாம படம் எடுக்கிறதையே விட்டுடுங்க சிவாஜி என ரசிகர்கள் கலாய்க்கும் அளவுக்கு வர்மத்தை போட்டே சாகடித்துவிட்டார். கமல்ஹாசனை வைத்து படம் எடுத்தால் நோண்டி நொங்கெடுப்பார் என சொல்வார்கள். அவரையே ஏமாற்றி இப்படியொரு சொதப்பல் படத்தை எப்படித்தான் ஷங்கர் எடுத்தாரோ என படம் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தது தான் மிச்சம்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல ஷங்கருக்கும் இந்த முறை சறுக்கியுள்ளது. 2.0, ஐ படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், அந்த படங்களை ரசிக்கும் ரசிகர்களும் அதிகம் இருந்தனர். ஆனால், இந்தியன் 2 படத்துக்கு அந்த வாய்ப்பே அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

2024ம் ஆண்டு நாக் அஸ்வின் மற்றும் சுகுமார் உள்ளிட்ட 2 இயக்குநர்களுக்குத்தான் ராஜ(மெளலி) மரியாதை கிடைத்தது. இந்நிலையில், 2025ம் ஆண்டு ஆரம்பத்திலேயே கேம் சேஞ்சர் படத்தின் மூலம் 1000 கோடி ரூபாய் வசூலை ஷங்கர் சாதித்து காட்டுவாரா? மாட்டாரா? என்கிற கேள்விகள் கிளம்பியுள்ளன.
ராம் சரணுக்கு லக் அடிக்குமா?: ஆர்ஆர்ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடித்த ஆச்சார்யா படம் படுதோல்வியை சந்தித்தது. அதே இயக்குநருடன் படம் நடித்தே தீருவேன் என அடம்பிடித்து இந்த ஆண்டு ஜூனியர் என்டிஆர் ஒரே ஆளாக கன்டெயினரை நகர்த்திக் கொண்டு 10 பேரை பின்னுக்குத்தள்ளும் காட்சி மற்றும் கிளைமேக்ஸில் மகனே அப்பாவை கொன்று விட்டு தானும் சாகும் காட்சியை எல்லாம் பார்த்து ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிட்டனர். தேவரா ரொம்ப ஓவரா இருந்த நிலையில், கேம் சேஞ்சர் படம் ராம் சரணுக்கு கை கொடுக்குமா? அல்லது இந்தியன் 2 படமே தேவலாம் என சொல்ல வைத்துவிடுமா என்கிற அச்சம் இருக்கத்தான் செய்கிறது.

நாக் அஸ்வின் கலக்கிட்டாரு: இந்த ஆண்டு டோலிவுட் இயக்குநர்களுக்குத்தான் செம ஜாக்பாட். நாக் அஸ்வின் 1100 கோடி வசூலை பிரபாஸை வைத்து எடுத்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்துள்ளார். நடிகையர் திலகம் படத்தை தொடர்ந்து இந்த படத்தின் மூலமும் அவருக்கு ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தன.
வைல்டு ஃபயரான சுகுமார்: புஷ்பா 2 படத்தின் மூலம் 1800 கோடி வசூலை இந்த புத்தாண்டு விடுமுறையுடன் கடக்க காத்திருக்கிறார் சுகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அவரும் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், கொள்ளை லாபத்தில் வைல்டு ஃபயராக கோலோச்சி நிற்கிறார் சுகுமார். அடுத்த ஆண்டு ராம்சரண் சுகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கன்ஃபார்ம் என்கின்றனர்.

கேம் சேஞ்சர் கோல் போடுமா?: 1000 கோடி வசூல் செய்தால் இனிமேல் டோலிவுட்டை பொறுத்தவரை மெகா ஹிட் படம் என்கிற மைல் ஸ்டோன் செட் பண்ணப்பட்டுள்ள நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. தமிழ்நாட்டில் தலை கீழாக நின்றாலும் அஜித்தின் விடாமுயற்சி படம் தான் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும். தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற இடங்களில் கேம் சேஞ்சர் கோல் போட வேண்டும் என்றால் படம் ரசிகர்களை கவரவேண்டும். அது மட்டும் பக்காவாக செட் ஆனால், 1000 கோடி அசால்ட் மேட்டர் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











