Unexpected ஆ இருக்குமாமே...எதற்கும் துணிந்தவன் டிரைலர் எப்போ வருது தெரியுமா ?
சென்னை : சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை சன் பிக்சர்ஸ் இன்று, அசத்தலாக வீடியோ ஒன்றுடன் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ அனைவரையும் யோசிக்க வைத்து விட்டது.
டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பிரியங்கா மோகன், சூரி, வினய் ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். நீண்ட காலத்திற்கு பிறகு சூர்யா படம் தியேட்டரில் ரிலீசாக உள்ளதால் இந்த படம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக இருந்து வருகிறது.

எதிர்பார்ப்பை கிளப்பிய எதற்கும் துணிந்தவன்
சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம், பொள்ளாச்சி சம்பவத்தை மையமாகக் கொண்ட படம் என பல வித தகவல்கள் இந்த படம் பற்றி சொல்லப்படுவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்கள், பாடல்கள் போன்றவற்றையும் வெளியிட்டு அனைவரின் மனதையும் கவர்ந்தது சன் பிக்சர்ஸ்.

தள்ளி போன ரிலீஸ்
பிப்ரவரி 4 ம் தேதியே எதற்கும் துணிந்தவன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்ததால் பல படங்களில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதால் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டு, மார்ச் 10 ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் டிரைலர் பற்றி அப்டேட்டை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது.

டிரைலர் எப்போ வருது
இந்த அறிவிப்பின் படி மார்ச் 2 ம் தேதி காலை 11 மணிக்கு எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளது. காத்திருக்கிறோம் என்ற கேப்ஷனுடன் சன் பிக்சர்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை விட, இதற்காக சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அசத்தலான வீடியோ
அந்த வீடியோவில், சத்யராஜ் வாக்கிங் போய் கொண்டிருக்க, சூர்யா ஒர்க்அவுட் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் சரண்யா, தம்பி...இன்னும் ரெடியாகலியா. எல்லோரும் ஆர்வமாக இருக்காங்க என்கிறார். அதற்கு சத்யராஜ், நான் அதை விட ஆர்வமாக இருக்கேன் என்கிறார். அப்போது சூர்யா, Unexpected ஆ இருக்கும் விடு என்கிறார். சரண்யாவும் குஷியாக, சோக்குடா...சோக்குடா...சீக்கிரம் வாங்டா என சொல்லிவிட்டு போகிறார்.

எப்படிப்பா இத ரெடி பண்ணுனாங்க
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இந்த வீடியோ ப்ரோமோவிற்காக எடுக்கப்பட்டதா அல்லது நிஜமாகவே படத்தில் இருக்கிறதா. டயலாக்கை பார்த்தால் ப்ரோமோவிற்காக எடுக்கப்பட்டதை போல் உள்ளது. ஆனால் சீன்களை பார்த்தால் படத்தில் உள்ளதை போல் உள்ளது. எப்படி ப்ரோமோவிற்கும் பொருந்தும் வகையில் கச்சிதமாக சீன், டயலாக்கை வைத்தார்கள் என ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications