சன் டிவி ப்ரைம் டைமில் ராதிகா - சீரியல் ட்ரெயிலர் இயக்கிய சமுத்திரகனி
சென்னை: இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி மீண்டும் டிவி சீரியல் பக்கம் திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராதிகா சன்டிவிக்காக புதிய சீரியலை தயாரிக்கிறார். இந்த டிவி சீரியல் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ உடன் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சமுத்திரகனியின் படத்தையும் போட்டுள்ளதால் ராதிகாவின் சீரியலை சமுத்திரகனி இயக்குவதாக தகவல் பரவியது. ஆனால் அவர் ட்ரெயிலரை மட்டுமே இயக்கி கொடுத்தாராம்.
சன்டிவியில் சித்தியில் தொடங்கிய ராதிகாவின் பயணம் சந்திரகுமாரி வரை நீடித்தது. சன்டிவியில் ப்ரைம் டைமில் 9.30 ஸ்லாட்டில் தொடர்ந்து தனது டிவி சீரியலை ஒளிபரப்பி வந்தார். சந்திரகுமாரி சீரியலின் நேரம் மாறவே பாதியிலேயே சீரியலை விட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக விஜி சந்திரசேகர் நடித்து ஒப்பேற்றினார்.

இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு ஹீரோயின் கிரியேட்டிவ் ஹெட் தனது சீரியலில் இருந்து வெளியேறியது அதுதான் முதல் முறை. ராடான் டிவி தயாரித்த சீரியல் பாதியிலேயே அவசரம் அவசரமாக நிறுத்தப்பட்டதும் முதல்முறை என்றால் மிகையாகாது. ராதிகா வேறு சேனலுக்கு சீரியலை இயக்குவார் என்று பேசப்பட்டது. ஆனால் ராதிகா தனது அடுத்த சீரியல் சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என்று பதிவிட்டுள்ளார்.
புதிய டிவி சீரியலை சமுத்திரகனி இயக்குவார் என்றும் மீண்டும் சின்னத்திரையில் இணைகிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராதிகா.
சமுத்திரகனி தற்போது பிஸியான இயக்குநராகவும் நடிகராகவும் இருக்கிறார், அவர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த போதே சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் தலைகாட்டினார். சின்னத்திரையில் அண்ணி, அரசி சீரியலை இயக்கினார். இதில் அரசி ராதிகாவின் தயாரிப்பு. சன்டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பானது. சினிமாவில் உன்னைச் சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். விஜயகாந்த் படத்தை இயக்கிய அவர், தொடர்ந்து சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்து பெயர் வாங்கினார்.
நாடோடிகள் படம் சிறந்த டைரக்டராக நிலை நிறுத்தியது. சாட்டை, அப்பா என அடுத்தடுத்த படங்களில் நடித்த அவர் அவ்வப்போது படங்களை இயக்கியும் வந்தார். தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் 2' திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. அடுத்த சாட்டை, வெள்ளை யானை, காப்பான், அல்லு அர்ஜுனோடு ஒரு படம், ராஜமவுலியின் RRR எனப் பல படங்கள் இவரது கைவசம் உள்ளன. இந்த சூழ்நிலையில் சமுத்திரகனி ராதிகாவின் சீரியலை இயக்குகிறாரா என்று தகவல் பரவியது.
இது பற்றி சமுத்திரகனி என்ன சொல்கிறார் என்று கேட்டால், ராதிகா நடிக்கும் புதிய சீரியலின் டிரெயிலரை இயக்கி கொடுத்தேன். ராடான் டிவி நான் வளர்ந்த இடம். அந்த சீரியலை நான் இயக்கவில்லை என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் ராடான் டிவிக்காக ராதிகா மேடம் கேட்டால் செய்து கொடுப்பேன் என்றும் உறுதியாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











