Ethirneechal: எதிர்நீச்சல் டீம் எடுத்த அதிரடி முடிவு.. இனி சண்டேஸ்லயுமா?
சென்னை: சன் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது எதிர்நீச்சல் தொடர். தொடரை திருச்செல்வம் இயக்கிவருகிறார்.
இந்தத் தொடர் அதிகமான பொருட்செலவுடன் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
ரசிகர்களை தொடர்ந்து கட்டிப்போட்டுவரும் எதிர்நீச்சல் தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது.

இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்: சன் டிவியில் பல தொடர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. திரைப்படங்களுக்கு இணையான பங்களிப்பை இந்தத் தொடர்கள் செய்து வருகின்றன. ரசிகர்களின் விருப்பத்தை உணர்ந்து, இந்த சீரியல்களின் உருவாக்கத்திற்காக அதிகமான பொருட்செலவையும் செய்ய தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளது சிறப்பான மாற்றமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பிரம்மாண்டமான உருவாக்கமாக எடுக்கப்பட்டுவரும் எதிர்நீச்சல் தொடர் சேனலின் முன்னணி தொடராக மாறியுள்ளது.
முன்னதாக கயல் தொடர் சன் டிவியின் முன்னணி தொடராக இருந்த நிலையில், அந்தத் தொடரை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கத்தில் இந்தத் தொடர் ரசிகர்களை ஈர்க்கும்வகையில் அடுத்தடுத்த பரபரப்பு கதைக்களங்களில் சிறப்பான எபிசோட்களை கொடுத்து மாஸ் காட்டி வருகிறது. விமர்சன ரீதியாக சிறப்பாக அமைந்துள்ள எதிர்நீச்சல் தொடரின் ஒவ்வொரு கேரக்டர்களும் சிறப்பான தேர்வாக காணப்படுகின்றன.
மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு அதிகமான டிஆர்பி கிடைப்பது வழக்கமாக உள்ள நிலையில், அந்த ட்ரெண்டை உடைத்து இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பான ஆதிரை -கரிகாலன் கட்டாய திருமண காட்சிகள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தத் தொடரை கோலங்கள் புகழ் இயக்குநர் திருச்செல்வம் இயக்கிவரும் நிலையில் திரைக்கதையும் அவர்தான்.

கோலங்கள் தொடரில் நடித்த ஸ்ரீவித்யா, இந்தத் தொடருக்கு வசனம் எழுதிவருகிறார். மதுமிதா, சபரி பிரசாந்த், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, மாரிமுத்து, சத்தியபிரியா உள்ளிட்டவர்கள் இந்தத் தொடரில் நடித்து வருகின்றனர். அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்துவரும் எதிர்நீச்சல் தொடர் தற்போது ரசிகர்களை குஷியாக்கும் வகையில் புதிய அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர் இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பான சீரியல்கள், சனிக்கிழமையையும் தங்களது வளையத்தில் சேர்த்துக் கொண்டன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையையும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று தற்போது எதிர்நீச்சல் தொடர் தன்னுடைய முதல் காயை நகர்த்தியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











