மூக்குத்தி அம்மன் 2 எடுக்கிறதுக்கு முன்னாடியே மொட்டை போட்ட சுந்தர். சி.. பழனி மலையில் கொண்டாட்டம்!
சென்னை: தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக சக்சஸ்ஃபுல் இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவரது படம் என்றாலே கண்டிப்பாக சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் தனது முதல் படத்திலிருந்து உழைத்துவருகிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் மதகஜராஜா திரைப்படம் வெளியானது. அடுத்ததாக அவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகம் வரவிருக்கிறது. சமீபத்தில்தான் அதன் பூஜை போட்ட சூழலில் சுந்தரும், குஷ்பூவும் பழநிக்கு சென்றார்கள்.
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் மணிவண்ணன். அவரிடம் உதவி இயக்குநராக சினிமா பயணத்தை தொடங்கியவர் சுந்தர்.சி. மணிவண்ணனிடம் வித்தைகளை கற்றுக்கொண்டு முறைமாமன் படத்தை கடந்த 1995ஆம் ஆண்டு இயக்கி இயக்குநராக அறிமுகமானார் சுந்தர். ஜெயராம், கவுண்டமணி, குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. படத்தில் காமெடி காட்சிகள் எல்லாம் இப்போது பார்த்தாலும் சிரித்து வயிறு வலிக்கும்.
கவனம் பெற்ற இயக்குநர்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு சுந்தர்.சியை தயாரிப்பாளர்கள் மொய்க்க தொடங்கினார்கள். அதன்படி முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவற்றில் முறை மாப்பிள்ளை மட்டும்தான் சரியாக போகவில்லை. மற்ற எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. குறிப்பாக ரஜினியின் கரியரில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக அருணாச்சலமும் ஒன்று.

காமெடி கிங்: சுந்தர்.சியை பொறுத்தவரை தனது படங்களுக்கு வருபவர்கள் அனைத்து கவலைகளையும் மறந்து சிரித்துவிட்டு செல்ல வேண்டுமென்பதுதான் ஃபார்முலா. அந்த ஃபார்முலாவை இன்றுவரை விடாமல் பிடித்து வைத்திருக்கிறார். அதில் சக்சஸும் ஆகிவருகிறார். அதேசமயம் அவரால் அன்பே சிவம் போன்ற படத்தையும் இயக்க முடியும். ஆனால் அந்தப் படத்தை பெரிதாக அப்போது யாரும் கொண்டாடவில்லை. அதனை நினைத்து இன்றுவரை அவர் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சுந்தர்.சி: இயக்குநராக இருந்த சுந்தர்.சி திடீரென்று நடிகராக மாறினார். அப்படி அவர் நடித்த தலைநகரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக இருந்த சுராஜ்தான் இயக்கியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து அவர் நடித்தாலும் பெரிய வெற்றி ஒன்றும் கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க மீண்டும் அவர் நகரம் மறுபக்கம் படத்தின் மூலம் இயக்குநரானார். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அடுத்ததாக அவர் இயக்கிய கலகலப்பு படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து அவரது இயக்கத்தில் வெளியான அரண்மனை சீரிஸ் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். கடைசியாக வெளியான மதகஜராஜாவும் ஹிட்டாகியிருக்கிறது.

மூக்குத்தி அம்மன் 2: இதற்கிடையே அவர் நடிகை குஷ்பூவை தனது முதல் படத்திலிருந்தே காதலித்தார். அந்தக் காதல் பல வருடங்களுக்கு பிறகு 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அடுத்ததாக நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கவிருக்கிறார் சுந்தர்.சி. அதற்கான பூஜை சமீபத்தில்தான் சென்ன்னையில் படு பிரமாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பழநியில் சுந்தர், குஷ்பூ: அந்தப் பூஜை மீனா, குஷ்பூ, ரெஜினா, டிடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் சுந்தர்.சியும், குஷ்பூவும் இன்று தங்களது 25ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடிவருகிறார்கள். அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை சொல்லிவரும் சூழலில் இரண்டு பேரும் பழநிக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு சென்றதைத் தொடர்ந்து சுந்தர்.சி மொட்டையும் அடித்திருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











