வடிவேலுவின் சிரிப்பு சரவெடி ‘கேங்கர்ஸ்’ படத்தின் இரண்டாம் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல வெற்றிப்படத்தை கொடுத்த சுந்தர் சி இயக்கத்தில் வியாழக்கிழமை வெளியானத் திரைப்படம் கேங்கர்ஸ். இந்த திரைப்படத்தில் வடிவேலு 12 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர் சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். கலகலப்பான நகைச்சுவைத் திரைப்படமான இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவலை பார்க்கலாம்.
வடிவேலு, முனிஷ்காந்த், பகவதி பெருமாள், அருள்தாஸ், வெங்கட்ராகவன், கேதரின் தெரசா, ஹரீஷ் பெரடி, வாணி போஜன், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில், வடிவேலு பலவிதமான கெட்டப்பில் வந்து ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து இருக்கிறார். குஷ்பூ சுந்தர் மற்றும் சுந்தர் சி-யின் 'அவ்னி சினிமேக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, சத்யா சி இசையமைத்துள்ளார். வெங்கட் ராகவன் இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இருக்கிறார்.
கேங்கர்ஸ்: அரசன் கோட்டை என்ற ஊரில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போகிறாள். இதை அந்த பள்ளி கண்டுகொள்ளாததால், அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் கேத்ரின் தெரசா, மாணவி மாயமானது குறித்தும், பள்ளி வளாகத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்கள் பற்றியும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார் அனுப்புகிறார். அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளிக்கு புதிதாக உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேருகிறார் சுந்தர்.சி. இவருடன் கேதரின் தெரசாவும், மற்றொரு உடற்கல்வி ஆசிரியரான வடிவேலும் சேர்ந்து, இவர்களால், காணாமல் போன மாணவியை தேடி அலைகின்றனர். அந்த மாணவி கிடைத்தாரா... உடற்கல்வி ஆசிரியராக வரும் சுந்தர் சி யார்? பள்ளியை சட்ட விரோதமாக பயன்படுத்தும் அரசியல் வாதிகள் யார் என்பது தான் இந்த படத்தின் கதை.

இரண்டாம் நாள் வசூல்: வடிவேலு மற்றும் சுந்தர் சி கூட்டணியில் பல வெற்றித்திரைப்படங்கள் வெளியான நிலையில், இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 314 தியேட்டர்களில், 1279 காட்சிகளில் திரையிடப்பட்டது. கேங்கர்ஸ் படத்தின் முதல் நாள் வசூல், sacnilk வலைதளம் தகவலின் படி சுமார் 58 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் நாளான நேற்று இப்படம் உலக அளவில் இரண்டு கோடியையும், தமிழ் நாட்டில் 1.5 கோடியாக உள்ளது. படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதாலும், இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதாலும் படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூக்குத்தி அம்மன்2 : இயக்குர் சுந்தர் சி கேங்கர்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து, மூக்குத்தி அம்மன் 2படத்தை இயக்கி வருகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சிமேக்ஸ், ஐ.வி. ஓய் என்டர்டெய்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வரும் இப்படத்தில், நயன்தாரா, குஷ்பு, மீனா, ரெஜினா ஆகியோர் கமிட்டாகி உள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறு வருகிறது. இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமான முறையில் கோவில் போல செட் போடப்பட்டு தொடங்கியது.


Click it and Unblock the Notifications











