சுந்தர் சி - வடிவேலுவின் காமெடி சரவெடி.. கேங்கர்ஸ் டிரைலர் வெளியானது!
சென்னை: இயக்குநரும், நடிகருமான சுந்தர்சியின் இயக்கத்தில் உருவாகி உள்ள கேங்கர்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு
வடிவேலு சுந்தர் சியின் கூட்டணியில் இணைந்துள்ளார். இப்படம் ஏப்ரல் 24ந் தேதி வெளியாக உள்ளது.
இயக்குநர் சுந்தர் சி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். 100 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட உருவாகி வரும் இத்திரைப்படத்தில், மீனா, ரெஜினா கஸான்ட்ரா, அபினயா, யோகிபாபு, மைனா நந்தினி ஆகியோர் கமிட்டாகி உள்ளனர். வேல்ஸ் நிறுவனம், ரெளடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்தின் பட பூஜையே கோவில் போல செட் போடப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கேங்கர்ஸ்: இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் தயாராகியுள்ள கேங்கர்ஸ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரில் 100 கோடி ரூபாய் பணத்தை கொள்ளை அடிக்க அனைவரும் கூட்டு சேர்ந்து முயற்சி செய்கின்றனர். இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டு சேர்ந்துள்ளனர். டிரைலரில் வடிவேலு பலவிதமான கெட்டப்பில் சிரிக்க வைத்துள்ளார். சுந்தர்.சி மற்றும் வடிவேலுவின் கூட்டணியில் வின்னர், லண்டன், கிரி, ரெண்டு, தலைநகரம், நகரம் மறுபக்கம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

24ந் தேதி ரிலீஸ்: இப்படத்தில், சுந்தர் சி நாயகனாக நடிக்க, நாயகியாக கேத்தரின் தெரசா நடித்துள்ளார். மற்றபடி வழக்கம் போல சுந்தர் சி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிக்கிறார்கள். பகவதி பெருமாள், ஹரீஷ் பேரடி, மைம் கோபி, முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, தீபா சங்கர், இளவரசு, சிங்கம்புலி, அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 24ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.
சுந்தர் சி பயந்தார்: சுந்தர் சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு தியேட்டரில் வெளியாகி சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், சதீஷ், நிதின் சத்யா, சோனு சூட் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் விஷால் பாடிய டியர் லவ்வரு.. டியர் லவ்வரு பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. 12 ஆண்டுகள் கழித்து வெளியாகும் படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இந்த காலத்திற்கு ஏற்றபடி படம் இருக்குமா போன்ற சந்தேகத்தால், படத்தை வெளியிட சுந்தர் சி பயந்தார். ஆனால், யாரும் எதிர்பாரா விதமாக இந்தப் படம் நன்றாக ஓடி வசூலை அள்ளியது.
மதகஜ ராஜா: பொங்கல் பண்டிகைக்கு ஷங்கரின் கேம் சேஞ்சர், பாலா இயக்கிய வணங்கான், காதலிக்க நேரமில்லை, தருணம், நேசிப்பாயா என அடுத்தடுத்த படங்கள் வெளியாகின. இதில், மதகஜராஜா திரைப்படம் தான் நல்ல வசூலை பெற்றது. மற்ற படங்கள் அனைத்தும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.


Click it and Unblock the Notifications











