ரஜினிகாந்த் படத்தை இயக்கவில்லை.. ’தலைவர் 173’ படத்திலிருந்து விலகிய சுந்தர். சி.. திடீரென என்ன ஆச்சு?
சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்தின் 'தலைவர் 173' படம் உருவாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படக்குழு சந்தித்துக்கொண்ட வீடியோவும் வெளியான நிலையில், தற்போது சுந்தர். சி அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள கடிதம் சமூக வலைதளத்தில் தீயாக பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அருணாச்சலம் படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர். சி சூப்பர் ஸ்டாரை இயக்கப் போகிறார் என்றதுமே ஒட்டுமொத்த ரசிகர்களும் சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்றனர். ஆனால், தற்போது திடீரென இப்படியொரு அறிவிப்பை சுந்தர். சி வெளியிட என்ன காரணம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்தை இயக்கிய சுந்தர். சி கமல்ஹாசன் பேனரில் படம் பண்ணுவதாக அறிவித்துவிட்டு இப்படி பல்டி அடித்து விட்டாரே இதற்கு பின்னாடி பெரிய பஞ்சாயத்து இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.
ரொம்பவே வருத்தமான முடிவு: அனைவருக்கும் இது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருக்கலாம். கமல்ஹாசன், ரஜினிகாந்த் என இரு பெரும் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் பொன்னான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், சில எதிர்பாராத சூழ்நிலை காரணமாக இந்த படத்தில் இருந்து நான் வெளியேறும் முடிவை எடுத்துள்ளேன். சூப்பர் ஸ்டார் மற்றும் ரஜினிகாந்த் இருவரது ஆலோசனை மற்றும் ஆசிர்வாதம் எனக்கு எப்போதுமே உறுதுணையாக இருக்கும்,
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: இந்த திடீர் முடிவு பலருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இதை எடுக்க வேண்டிய சூழ்நிலையில், தான் இப்படியொரு கடினமான முடிவை எடுத்தேன். தலைவர் 173 படத்தில் இருந்து நான் விலகும் முடிவு யாருக்காவது கஷ்டத்தை ஏற்படுத்தினால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என சுந்தர். சி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
என்ன ஆச்சு?: கமல்ஹாசன் பல வருடங்களாகவே ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். கடைசியாக அதற்கான இயக்குநரும் அமைந்த நிலையில், தற்போது அவரும் வெளியேறிய நிலையில், ராஜ்கமல் நிறுவனம் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுமா? ரஜினிகாந்த் - கமல் கூட்டணியில் உருவாகும் படத்தை இயக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. சுந்தர். சி வெளியேற யார் காரணம் என்கிற விவாதங்களையும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கிளப்பி உள்ளனர். முன்னதாக அரண்மனை 5 என ஏகப்பட்ட ட்ரோல்கள் வந்த நிலையில், ரஜினிகாந்த் சுந்தர். சி வேண்டாம் என்றுக் கூறிவிட்டாரா என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விரைவில் உண்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











