அப்பாவுக்கு இன்னும் அவ பாப்பாதான்.. மகள் திருமணத்தில் உணர்ச்சிவசப்பட்ட சுந்தர்.சி.. குஷ்பு நெகிழ்ச்சி
சென்னை: தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர்.சி ஆகியோரின் மூத்த மகள் அவந்திகா, கடந்த ஜூன் 25-ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலரான ஸ்ரவண் ஸ்ரீனிவாசன் என்பவரை கோவாவில் நடைபெற்ற நெருங்கிய குடும்ப விழாவில் திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணம், தென்னிந்திய திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பலர் பங்கேற்ற நட்சத்திர விழாவாக மாறியது.
திருமணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்த குஷ்பு, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மணப்பெண் அலங்காரத்தில் இருக்கும் அவந்திகாவை பாசத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் சுந்தர்.சியின் புகைப்படத்தை பகிர்ந்த அவர், "When the father sees his baby as a bride for the first time. And the daughter's excitement captured beautifully. My fav pic" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அப்பாவுக்கு இன்னும் அவ பாப்பாதான்: குஷ்புவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மணமகளாக நிற்கும் மகளை பெருமையுடனும் பாசத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கும் சுந்தர்.சியின் பார்வையும், அருகில் உற்சாகமாக சிரித்துக் கொண்டிருக்கும் அவந்திகாவின் முகபாவனையும் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. "மகள் எவ்வளவு பெரியவளானாலும் அப்பாவுக்கு அவள் எப்போதும் குழந்தைதான்" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காதலும் குடும்ப சம்மதமும்: அவந்திகா - ஸ்ரவண் ஸ்ரீனிவாசன் திருமணம் காதலும் குடும்ப சம்மதமும் இணைந்த திருமணம் என்று குஷ்பு ஏற்கனவே தெரிவித்திருந்தார். இரு குடும்பங்களின் முழு சம்மதத்துடன், மணமக்களின் விருப்பப்படி மிகவும் எளிமையாகவும், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையிலும் திருமணம் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஸ்ரவண் ஸ்ரீனிவாசன் சென்னை சேர்ந்த மெர்சன்ட் நேவி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

நட்சத்திரங்கள் குவிந்த திருமணம்: கோவாவில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, அமலா, வெங்கடேஷ், த்ரிஷா, தமன்னா, அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட இந்திய திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழக முதலமைச்சர் விஜய்யையும் நேரில் சந்தித்து குஷ்பு - சுந்தர்.சி குடும்பத்தினர் அழைப்பிதழ் வழங்கியிருந்ததும் அப்போது பேசுபொருளானது.

ஒவ்வொரு பதிவும் வைரல்: திருமண அறிவிப்பு, மெஹந்தி, வரவேற்பு, திருமண புகைப்படங்கள் என ஒவ்வொரு பதிவும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது சுந்தர்.சி - அவந்திகா இணைந்துள்ள இந்த ஒரே புகைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. "ஒரு தந்தையின் கண்களில் தெரியும் பெருமை, ஒரு மகளின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி... இந்த ஒரு புகைப்படத்திலேயே முழு கதையும் இருக்கிறது" என்று ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications