சிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்!
Recommended Video

சென்னை: சிவகார்த்திகேயனுக்காக செந்தில் கணேஷை பாடவைக்க போவதாக இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே வெற்றிகரமாக நடந்து முடிந்து இருக்கிறது சூப்பர் சிங்கர் சீசன் 6. இப்போட்டியில் மக்கள் இசைக்கலைஞரான செந்தில் கணேஷ் முதலிடம் பிடித்தது ஒட்டுமொத்த மக்களிசைக் கலைஞர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கொண்டாடுகின்றனர்.

சூப்பர் சிங்கர் சீசன் 6 இறுதிப்போட்டியில் பாடகர்கள் இரண்டு சுற்றுகளில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். எப்போதுமே மேடையில் கலக்கி அனைவரின் பாராட்டுகளையும் பெறும் செந்தில் கணேஷ், வழங்கப்பட்ட இரண்டு வாய்ப்புகளையும் மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
எல்லா சூப்பர் சிங்கர் சீசனிலும், வெற்றிபெறும் போட்டியாளர் ஒரு பிரபல இசையமைப்பாளரின் இசையில் பாடுவதற்கான வாய்ப்பை விஜய் டிவி ஏற்படுத்தி கொடுக்கிறது. அந்த வகையில் சீசன் 6ல் வெற்றிபெறுபவர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடுவார் என உறுதியளிக்கப்பட்டது.
இதனையடுத்து வெற்றிபெற்ற செந்தில்கணேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன் எந்த படத்தில் பாடப் போகிறார் என்று எதிர்பார்ப்புடன் இருக்கும்போது, இசையமைப்பாளர் டி.இமானிடம் இருந்து அதிரடி அறிவிப்பு வந்துள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவக்கார்த்திகேயன் சமந்தா நடிக்கும் சீமராஜா திரைப்படத்தில் அட்டகாசமான ஒரு கிராமிய பாடலை செந்தில்கணேஷை பாட வைக்க போகிறார் என்பதை மகிழ்ச்சி பொங்க டி.இமான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே இதுபோன்ற ஃபோக் பாடல் என்றால் இமான் புகுந்து விளையாடுவார். அதுவும் சிவா என்று வரும்போது அது தனி ரகமாக இருக்கும். சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடலை அவரின் முன்பே பாடி கலக்கினார் செந்தில். இப்போது சிவகார்த்திகேயனுக்கே பாடும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாட்டு நிச்சயமாகிவிட்டது. இப்போது டி.இமான் அடுத்த வாய்ப்பையும் வழங்கிவிட்டார்.
"கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததாக" என்ற சொல்லாடல் உண்டு. இது அதற்கும் ஒருபடி மேலே போய்... கோவிலே வந்ததாக எடுத்துக்கொள்ளலாம். வாழ்த்துக்கள் செந்தில்!


Click it and Unblock the Notifications











