சூப்பர் ஸ்டாரை உச்சி குளிர வைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. அப்படி என்ன நடந்துச்சு..
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வந்து கொண்டு இருக்கின்றார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் லால் சலாம். அதேபோல் இவர் இதுவரை 3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் செய்த செயல் ஒன்று பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், பாராட்டுகளையும் பெற்று வருகின்றார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் இன்றைக்கும் நடிகர்களின் பின்னால் கூட்டம் கூட்டமாக திரள்வது அவர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவது என்ற கலாச்சாரமாக மாறிவிட்ட செயல்களில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை. ஆனால் உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டியது, அல்லது கதாநாயகனுக்கு நிகராக கொண்டாடப்படவேண்டிய இடத்திற்கு தகுதியானவர்கள் இயக்குநர்கள்தான். ஒரு படத்தை தனது கற்பனையில் உருவாக்கி அதனை தனது இயக்கத்தினால் திரையில் கொண்டுவர, இயக்குநர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பெரிதாக யாருக்குமே அக்கறை இல்லை என்றே கூறலாம்.

ஒரு கதாநாயகன், ஒரே நேரத்தில் இரண்டு முதல் அதற்கு மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுவிடுவார். இதில் ஒருபடம் தோல்வியைத் தழுவினாலும் மற்றொரு படம் கைகொடுத்துவிடும். ஆனால் ஒரு இயக்குநருக்கு சினிமா உலகம் அப்படியான சூழலை உருவாக்கித் தரவில்லை. ஒரு இயக்குநர் தனது இருப்பை தொடர்ந்து வெளிக்காட்டிக் கொண்டே இருக்க, தொடர்ந்து வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டிய சூழல் உள்ளது. ஒருவேளை, அந்த இயக்குநர் தோல்விப் படம் கொடுத்துவிட்டால், அவரால் உடனே அவரது அடுத்த படத்தை தொடங்க முடியுமா என்றால் கேள்விக் குறிதான். அல்லது, அடுத்தப் படத்தை தொடங்க பல ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டும். இந்த காத்திருப்பு என்பது பல அலைக்கழிப்புகளால் நிறைந்தது.
நிதி உதவி: சினிமாதான் வாழ்க்கை என வந்த இயக்குநர், தான் இயக்கிய படத்தின் மூலம் தனக்கு கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஆயுள் முழுவதும் வாழ்ந்துவிட முடியாது. இப்படியான நிலையில், இயக்குநர்கள் ,உதவி இயக்குநர்களின் வாரிசுகளின் கல்விக்கு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நிதி உதவி அளித்துள்ளார். அதாவது, இயக்குநர்கள் ,உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடாவருடம் ரூபாய் 10 லட்சம் கல்வி உதவி வழங்குவதாக உறுதி அளித்திருந்தார்.

ரஜினிகாந்த்: அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டிற்கு நேற்று அதாவது செப்டம்பர் 13ஆம் தேதி, ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான காசோலையை, இயக்குநர் சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமாரிடம் வழங்க செயலாளர் பேரரசு , பொருளாளர் சரண் , பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். மேலும் இந்த நிகழ்வின்போது, இயக்குநர் சங்க நிர்வாகிகள் இயக்குநர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்தனர். இந்த விசயத்தை கேள்விப்பட்ட பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள்களை நல்ல தன்மையுடன் ஆளாக்கியுள்ளார் என பாராட்டி வருகின்றனர்.

உரியவர்களுக்கு: இந்த நிகழ்வின்போது பேசிய, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், " நான் என்னால் முடிந்த உதவிகளை எனது உதவி இயக்குநர்களுக்குச் செய்து வருகின்றேன். அதேநேரத்தில், எனக்கு சிலர் நேரடியாக போன் செய்து உதவி கேட்டார்கள். ஊடகங்களிலும் இயக்குநர்களின் குழந்தைகள் கல்விக்கு சிரம்படும் செய்திகளைப் பார்த்தேன். நாம் செய்யும் உதவியை இயக்குநர் சங்கத்தின் மூலம் செய்தால், அந்த உதவி உரியவர்களுக்கு சென்று சேரும் என நினைக்கின்றேன்" என பேசினார்.


Click it and Unblock the Notifications











