Rajinikanth Health: அப்பாதானே எல்லாம்.. ரஜினிகாந்த் விரைவில் குணமடைய மனமுருகி வேண்டிய மகள் சௌந்தர்யா
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான செய்திகள் வெளியானதும் ஒட்டுமொத்த திரையுலகம் மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சிகுள்ளானார்கள். இதுவரை மருத்துவமனைத் தரப்பில் இருந்துதான் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர் எதுவுமே கூறாமல் இருப்பது தலைவர் ரசிகர்களுக்கு கொஞ்சம் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் பல கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல்நிலை சீக்கிரம் சரியாக வேண்டும் என அவரது மகள் சௌந்தர்யா சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான கோவிலான வடிவுடையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக மட்டும் இல்லாமல் உச்ச நடிகராகவும் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வரும் 10ஆம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, கூலி படத்தின் படப்பிடிப்பு என அனைத்திலும் இரவு பகலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயங்கி வருவதால் அவரது உடல் நிலையில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் தொடக்கத்தில் தெரிவித்தனர்.

மருத்துவ அறிக்கை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், " இதயத்தில் இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததாகவும், அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாமல், transcatheter முறையில் அந்த ரத்த நாளத்தில் stent பொருத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதால் அவர் நலமாக உள்ளார் எனவும், இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமைச்சர் கருத்து: மருத்துவமனை கொடுத்துள்ள இந்த அறிக்கை பலருக்கும் மன நிம்மதியைக் கொடுத்தாலும், அவரது ரசிகர்களுக்கு தலைவர் வீடு திரும்பினால்தான் நிம்மதி என்ற மனைநிலையில் உள்ளனர். சூப்பர் ஸ்டாரின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் இன்னும் எதுவும் கூறாமல் இருப்பதும் ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கின்றது. மேலும் அமைச்சர் மா. சுப்ரமணியம், சூப்பர் ஸ்டார் உடல்நிலை குறித்து பேசும்போதுகூட ரஜினிகாந்த் நலமாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் எனத் தெரிவித்தார்.

ரசிகர்கள்: தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் விரைவில் குணமாகி வீடுதிரும்பவேண்டும் என பல்வேறு பிராத்னைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல சிறப்பு பூஜைகள் நடத்தியும், அங்கபிரதட்சனம் செய்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் ஊடகங்களிடம் ரசிகர்கள் பேசும்போதுகூட, சூப்பர் ஸ்டார் விரைவில் குணமாகி வீடு திரும்பினால் போதும் என பேசினார்கள்.

சௌந்தர்யா ரஜினிகாந்த்: இந்நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் சென்னையில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலான வடிவுடையம்மன் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது. மேலும் மருத்துவர்களின் அறிக்கைப்படி, இன்று மாலை அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











