Rajinikanth: ஹேப்பி பர்த் டே தலைவா! மீண்டும் ஒருமுறை இதைச் செய்யுங்க.. ரஜினிக்கு ரசிகர்கள் கோரிக்கை!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய திரையுலகமுமே வாழ்த்து தெரிவித்து வருகின்றது. உலகம் முழுவதும் உள்ள அவரது கோடான கோடி ரசிகர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னையில் கொட்டித் தீர்த்துவரும் டிசம்பர் மழையிலும் அவருக்கு வாழ்த்து சொல்ல காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கோடான கோடி ரசிகர்களில் அவரது அட்டகாசமான நடிப்பிற்கு அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவர்களின் மனதில் இருக்கும் சில எண்ண ஓட்டங்களில் சிலவற்றை இங்கு தொகுப்பாக பார்க்கலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு அட்டகாசமான ஸ்டைலிஷ்ஷான நடிகராகத்தான் பலருக்கும் அறிமுகம். 90களின் தொடக்கத்தில் இருந்து ஸ்டைல் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் எனக் கூறும் பெரும்பான்மையான ரசிகர்கள் உள்ளனர். இதனாலோ என்னவோ, ஒரு கட்டத்திற்கு மேல் மாஸான படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். அவரது ஸ்டைலான நடிப்பினை ரசிக்கும் அதே ரசிகர்கள்தான், அவரது எதார்த்த நடிப்பினைக் கொண்டாடியுள்ளார்கள். எதார்த்த நடிப்பிலும் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் தான் என பலமுறை நிரூபித்துள்ளார்.

இப்போதும் ரசிகர்கள் மத்தியில், மாஸான காட்சிகள் எல்லாம் இல்லாமல், நடிப்பில் சூப்பர் ஸ்டார் அட்டகாசப்படுத்திய படங்களில் உங்களுக்குப் பிடித்த படங்கள் எனக் கேட்டால், ரசிகர்கள் மத்தியில் இருந்து, ஆறில் இருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், ஜானி, புதுக்கவிதை போன்றப் படங்களைக் கூறுவார்கள். மேற்குறிப்பிட்ட படங்களை அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்திய ரஜினிகாந்த், ஒரு கட்டத்திற்கு மேல், முழுக்க முழுக்க மாஸான அதிரடிச் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து, அதில் கொடிகட்டிப் பறந்தும் வருகின்றார்.

முதிர்ந்த நடிப்பு: மேற்குறிப்பிட்ட படங்களில், முள்ளும் மலரும் படத்தில் கையை இழந்த பின்னர், வேலைலையும் இல்லை என சந்திரபாபு ரஜினியைப் பார்த்துக் கூறும்போது, தனது பழைய மூர்க்கத்தோடு சேர்ந்த இயலாமையும், ஆற்றாமையும், தனது தங்கையின் எதிர்கால வாழ்க்கை குறித்தும் நினைத்துக் கொண்டு கண்ணீரோடு அவர் பேசும் காட்சியை, இதுவரை தமிழ் சினிமாவால் மீட்டுருவாக்கம் செய்யமுடியவில்லை எனக் கூறலாம். குறிப்பாக, ' ரெண்டு கை ரெண்டு கால் போனாக் கூட காளி இங்கறவன் பொழச்சுக்குவான் சார்... கெட்டப் பையன் சார் அவன்' என அவர் பேசும் காட்சியெல்லாம் இவரது முதிர்ந்த நடிப்புக்கு உதாரணம்.

உச்சம்: அதேபோல், புதுக்கவிதை படத்தில், பிரிந்து போன காதலியைப் பார்த்ததும் அவர் பேசும் வசனம், பார்க்கும் பார்வை, பின்னணி இசையில் இளையராஜா என அந்தக் காட்சியே ஒரு மேஜிக் போல இருக்கும். பிரிந்து போன காதலியுடனான நலம் விசாரிப்புக்குப் பின்னர், நான் போலாமா என பிரிந்து போன காதலி கேட்க, ' அதான் போய்ட்டயே' எனக் கூறிவிட்டு, அவர் பார்க்கும் பார்வை காதல் பிரிவின் உச்சத்தை வெளிப்படுத்தியிருக்கும்.

கல்ட் கிளாசிக்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இவரது நடிப்பில் வெளியான, கபாலி மற்றும் காலா படங்களில் அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார். கபாலி படத்தில் குமுத வள்ளியைப் பார்க்கும்போது, காலா படத்தில் தனது முன்னாள் காதலி ஜெரினாவைத் தனியாக சந்தித்துப் பேசும்போதும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பும், அதில் அவர் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமும் ரஜினிக்குள் இருக்கும் நடிப்பினை மீண்டும் வெளிக்கொண்டுவரச் செய்த காட்சிகள். இந்தப் பிறந்த நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ரசிகர்கள் வைக்கும் கோரிக்கையாகவே இதை எடுத்துக் கொள்ளலாம். இந்த மாஸ் படங்கள் எல்லாம் இல்லாமல், அட்டகாசமான கல்ட் கிளாசிக் பட்டியலில் இடம் பெறும் அளவிற்கு ஒரு கதையைத் தேர்வு செய்து, நடிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா.



Click it and Unblock the Notifications











