Amaran: என் அண்ணன் சீனா போர்ல குண்டடி பட்டாரு.. பர்ஸ்னல் டச்சோட படம் பார்த்தேன் - மனம் திறந்த ரஜினி!
சென்னை: ஒரு ஆண்டில் எத்தனைப் படங்கள் வந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெறும். அப்படி ஆண்டுக்கு ஒரு சில படங்கள் அமைந்துவிடுகின்றது. அந்தவகையில் இந்த ஆண்டு இதுவரை வெளியான தமிழ் படங்களில் வெகு சில படங்கள் அந்த வரிசையில் உள்ளது. உதாரணமாக, மகாராஜா, வாழை போன்ற படங்களைக் கூறலாம். அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படமும் இணைந்துள்ளது எனலாம். படம் ரசிகர்களைக் கடந்து, இந்திய ராணுவ வீரர்கள், தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அமைச்சர்கள், திரையுலக ஜாம்பவான்கள் என பலரது பாராட்டுகளைக் குவித்து வருகின்றது.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று அதாவது நவம்பர் 1ஆம் தேதி அமரன் படத்தினைப் பார்த்துவிட்டு, படத்தின் தயாரிப்பாளர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். இந்நிலையில் இன்று படக்குழுவினரைச் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனம் திறந்து பாராட்டியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. படக்குழுவினரைப் பாராட்டி அவர் பேசிய வீடியோவை ராஜ் கமல் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் அவர் கூறியிருப்பதாவது, " கமல் ஹாசனை நான் எவ்வளவு பாராட்டினாலும் அது கம்மிதான். முகுந்த் வரதராஜனின் பயோபிக்கினை படமாக எடுக்கவேண்டும் என அவர் முடிவு செய்ததற்காகவே அவருக்கு பாராட்டு. படத்தினை ராஜ்குமார் இயக்கியுள்ளது மிக மிக அருமை. இந்தியாவில் எவ்வளவோ ராணுவப் படங்கள் எடுத்துள்ளார்கள். ஆனால் ராஜ்குமார் படத்தினை இயக்கியுள்ள விதம் மிக மிக அருமை. குறிப்பாக ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசை அமைப்பாளர் என ஒட்டுமொத்த படக்குழுவும் செய்துள்ள வேலை என்பது பாராட்டுக்குரியது.
எஸ்.கே: அதன் பின்னர், சிவகார்த்திகேயன் தான் ஏற்று நடித்துள்ள முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார். சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையிலேயே இந்தப் படம் சிறப்பான படமாக மாறும். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். அதேபோல் சாய் பல்லவி தான் ஏற்று நடித்துள்ள இந்து கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். படம் பார்த்து முடிக்கும்போது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

பர்ஸ்னல் டச்: எனக்கு இந்தப் படத்துடன் பர்ஸ்னல் டச் என்றால், எனது இரண்டாவது அண்ணன், நாகேஷ்ராவ் கெய்க்வாட் சுமார் 14 ஆண்டுகள் ராணுவத்தில் இருந்தார். இந்தியா - சீனா போரில் போர் புரிந்தார். அந்தப் போரின்போது, அவரது முதுகு எலும்பில் குண்டு பாய்ந்தது. அதன் பின்னர் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த பர்ஸ்னல் டச்சுடனேதான் படத்தினைப் பார்த்தேன்.
ராணுவ உடை: அனைவரும் பார்க்கவேண்டிய படம் அமரன். ராணுவ வீரர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுகின்றார்கள் என்பது புரியும். அவர்கள் அங்கு நம்மை பாதுகாக்கவில்லை என்றால், நாம் நிம்மதியாக இருக்க முடியாது. இந்துவின் அப்பா கூறியது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. முகுந்த் - இந்து திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாதவர், முகுந்த்தை ராணுவ உடையில் பார்த்ததும் ஒத்துக்கொண்டது எல்லாம் அருமை. ராணுவ வீரர்களை சீருடையில் பார்த்தால் யோசித்துப் பாருங்கள்.

கிரேட்: இந்தப் படத்தை எடுத்ததற்காக கமல்ஹாசன், இயக்குநர் ராஜ்குமார், நடிகர் சிவகார்த்திகேயன் என ஒட்டுமொத்த படக்குழுவையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது. மனமார்ந்த பாராட்டுக்கள், இந்தப் படத்தினை தயவு செய்து அனைவரும் பாருங்கள். இந்தப் படம் இந்தியன் எனும் உணர்வை மேம்படுத்தும். படம் நன்றாக ஓடிக்கொண்டு உள்ளது. தி கிரேட் முகுந்த். ஜெய் ஹிந்த்" என படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











